நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்! உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்! உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

breaking news

அந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வில் விலக்குகோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2017-ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவ சேர்க்கைச் சட்டம், தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவ சேர்க்கைச் சட்டம் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

  இந்தநிலையில், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அந்த மாநிலங்களே தங்களது சொந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று இருக்கும்போது, இதுபோன்ற நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வாங்கித் தரவேண்டும் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

  அந்த வழக்கு, ஒரு வாரத்துக்கு முன்னர் நீதிபதிகள், மணிகுமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டது’ என்று விளக்கமளித்தார். அதனையடுத்து, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நாள்கள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அதன்படி, இன்று மத்திய உள்துறை துணைச் செயலாளர் ராஜீவ் எஸ்.வைத்யா சார்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தது. அந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

  அந்த மசோதாக்களை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்தார். நிறுத்திவைக்கப்பட்ட மசோதா செப்டம்பர் 22-ம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது’ என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

  முன்னதாக, நீட் விலக்கு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

  Also see:


  Published by:Karthick S
  First published: