கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் என்று மத்திய பட்ஜெட் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்தக்கூடிய பட்ஜெட் இந்த பட்ஜெட். எனவே இந்த பட்ஜெட்டை தமாகா வரவேற்கிறது.
அதாவது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் இது. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க, மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி வரை வட்டியில்லா கடன் வழங்க, கூட்டுறவு சங்கங்களின் வரி குறைப்பு ஆகியவற்றிற்கு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதையும் படிங்க : நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு எந்த தீர்வும் பட்ஜெட்டில் இல்லை : கே.எஸ். அழகிரி
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு. 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, கோதையாறு–பெண்ணையாறு–காவிரி இணைப்புக்கும், நதிநீர் இணைப்புக்கும் அனுமதி அளிக்கப்படுவதும், சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதும், 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வசதி கிடைப்பதும், 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டமும், போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடும், 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மனநல சிகிச்சையும், மகளிருக்கு புதிய திட்டங்களும், நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கையும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
இதையும் படிங்க : அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்கள் நலன், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கும், அவருக்கு உறுதுணையாக பணியாற்றிய துறையினருக்கும் தமாகா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நோய்த்தொற்று பரவும் சவாலான காலக்கட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, விவசாய வளர்ச்சியை, தொழில் வளர்ச்சியை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் பட்ஜெட்டில் உள்ள அனைத்து அம்சங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று தமாகா சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Union Budget 2022