கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண்மைத்துறை சார்பில் 173 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கஜா புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கஜா புயல் தாக்குதலில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல ஆண்டு காலம் பாதுகாத்து வந்த தென்னை மரங்கள், வாழை மரங்களை அனைத்தும் விழுந்து நாசமடைந்தன. அதனால், விவசாயிகள் பெருமளவில் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
கஜா பாதிப்பிலிருந்து விவசாயிகள், தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இந்தநிலையில், புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்
அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. ஏற்கனவே மின்சாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்தார்.
அதனையடுத்து, மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங், வேளாண்துறை சார்பாக, 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். அதில், தென்னை மரங்களுக்கு 93 கோடி ரூபாயும், தோட்டப் பயிர் சாகுபடிக்கு 80 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.