’பெரியப்பா எம்ஜிஆர், குட்டிக்கதை, பராசக்தி வசனம்’ பூந்தமல்லியில் மு.க.ஸ்டாலின்!

’பெரியப்பா எம்ஜிஆர், குட்டிக்கதை, பராசக்தி வசனம்’ பூந்தமல்லியில் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

”பழனிசாமியும் – பன்னீர்செல்வமும் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று அவர்களுக்கே தெரியாது.”

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பூந்தமல்லியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, எம்.ஜி.ஆர் தன்னை நன்றாக படிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

  தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, கிராமசபை கூட்டங்களை நடத்தி முடித்த ஸ்டாலின், 2-ம் கட்டமாக ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின்.

  எங்கே தங்கி இருக்கிறார் சசிகலா?

  இதற்காக மீஞ்சூர் - வண்டலூர் சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க மேடையிலேயே பெரிய பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

  எம்.ஜி.ஆர். பெரியப்பா

  அப்போது பேசிய அவர், ”பெரியப்பாவா எம்.ஜி.ஆர் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார். அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரை என்னைக்காவது பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா. ரயில் இன்ஜின் திருடியவனை விட்டுவிட்டு கரியை திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது” என்றார்.

   

  குட்டிக்கதை சொன்ன ஸ்டாலின்

  மேலும் தொடர்ந்த ஸ்டாலின், ”கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தங்களுடைய சுயநலத்திற்காக சூறையாடிய மாபெரும் குற்றவாளிகள் தான் பழனிசாமியும் – பன்னீர்செல்வமும். இரண்டு பேரும் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இருவரும் எதிரிகள்தான். அவர்கள் இருவருக்கும் ஆகாது. ஆனால் ஒன்றாகத்தான் இருப்பார்கள். ஏன் என்றால் அவ்வாறு நடித்தால்தான் சுருட்ட முடியும். அதனால் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்களை நினைக்கும்போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. 2 திருடர்கள் இருந்தார்களாம். ஒருவரை ஒருவரை வீழ்த்த நினைத்தார்கள். அதனால் இரண்டு பேரும் தந்திரமாக ஒருவரை ஒருவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். எங்கே பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்ட போது இரண்டு பேரும் ஆற்று நீரில் நின்றுகொண்டு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

  அதேபோல 2 பேரும் ஆற்று நீரில் இருந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இவர் வாள் வீசுவார் என்று தெரிந்து அவரும், அவர் வாள் வீசுவார் என்று தெரிந்து இவரும் ஆற்றுக்குள் மூழ்கி தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டார்கள். என்று அந்த கதையில் இருக்கிறது. அதுபோல எத்தனுக்கு எத்தன் தான் இந்த பழனிசாமியும் ஓ.பி.எஸ்ஸும். அந்த கதையில் அவ்வாறு மூழ்கிய இருவரையும் முதலை கவ்விக் கொண்டு சென்றுவிட்டது. அந்த முதலை யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் 2 பேரும் இன்று உலகமகா நடிப்புத் திலகங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

  பராசக்தி வசனம்

  திருத்தணி வேல் குறித்து பேசிய அவர், “அங்க இருந்த பூசாரிங்க எல்லாம் என் கைல வேலை கொடுத்தாங்க. அத நான் வாங்குனேன். இது தப்பா? திமுக என்னைக்குமே கடவுளை எதிர்த்தது இல்ல. கோயில்கள் கூடாது என்பதல்ல. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என பராசக்தி வசனம் பேசினார் ஸ்டாலின்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: