UDIT SURYAS FATHER VENKATESAN IS THE REAL VILLAIN IN THE NEET EXAM IMPEACHMENT CASE SAYS HC OF MADURAI BENCH VIN
நீட் ஆள்மாறாட்ட வழக்கு - மாணவனின் தந்தையே உண்மையான வில்லன் என்று நீதிமன்றம் கருத்து!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனே உண்மையான வில்லன் என்றும் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட உதித் சூர்யா, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், நீட் தேர்வில் உதித் சூர்யாவிற்கு பதிலாக யார் தேர்வெழுதினார்கள் என்பதை கூற அவரது தந்தை வெங்கடேசன் மறுப்பதாக தெரிவித்தார்.
மேலும், வெங்கடேசன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது ஜாமின் மனு தேனி நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதி சுவாமிநாதன், மாணவன் உதித் சூர்யாவின் வயதை கருத்தில் கொண்டு அவரை ஜாமினில் விடுவிக்க நினைப்பதாகக் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் உண்மையான வில்லன் உதித் சூர்யாவின் தந்தையே எனக் குறிப்பிட்டார்.
எனவே உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, வெங்கடேசன் தனது ஜாமின் மனுவை வாபஸ் பெற்றால் அவரது மகனை ஜாமினில் விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறினார்.
இதனால், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அத்துடன் இந்த வழக்கு மிக, மிக முக்கியமானது என்பதால் விரிவாக விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, வெங்கடேசன் தனது லட்சியத்தை மகன் மீது திணித்ததால் வந்த வினை இது என்றும் கருத்து கூறினார்.