முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்ணன் படம் தொடரும் சர்ச்சை - உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ட்வீட்

கர்ணன் படம் தொடரும் சர்ச்சை - உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ட்வீட்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கர்ணன் படத்தின் நிகழ்வாண்டு குறித்து சர்ச்சை தொடரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது. இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் சிறந்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. 1995-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியன் குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படம் தொடங்கும்போது இது உண்மைச் சம்பவம் அல்ல என்ற விளக்கத்துடன் கதை நடக்கும் நிகழ்வாண்டு 1997-ன் முற்பகுதி என்று படம் தொடங்கும். அதனையடுத்து, கொடியன்குளம் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது ஜெயலலிதா இருந்த 1995-ம் ஆண்டு. பிறகு எதற்காக, கருணாநிதியின் ஆட்சிக்காலமான 1997-ம் ஆண்டு என்று காட்சிப்படுத்த வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ச்சியாக மாரிசெல்வராஜூக்கு கண்டனங்கள் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.

அதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று முதல் திருத்தப்பட்ட டைட்டில் கார்டுடன் படம் வெளியாகியுள்ளது. அதில், கதையின் நிகழ்வாண்டு 1990-களின் பிற்பகுதியில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1990-களின் பிற்பகுதி என்றாலும் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தையே குறிக்கிறது. மாரி செல்வராஜ் திட்டமிட்டே கருணாநிதி மீது அவதூறு பரப்புகிறார் என்று இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கருணாநிதியின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Dhanush, Karnan, Mari selvaraj, Udhayanidhi Stalin