‘தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேட்கிறேன்...’ : உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

உதயநிதி ஸ்டாலின்

ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த நீட் தேர்வை இந்த அடிமை ஆட்சி கொண்டுவந்து திணித்து துரோகம் செய்கிறது.

  • Share this:
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கலைஞரின் பேரனாக கேட்கிறேன் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

பிரச்சாரத்தின் போது செந்தாமரை, செந்தமிழ்ச்செல்வி என இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார களத்திற்கு நகர்ந்துள்ளனர். அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு முதல் நாள் பிரச்சாரத்தை சிந்தாதிரிப்பேட்டையில் தொடங்கினார்.

தொண்டர்கள் படைசூழ  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பஜார் தெருவில் தொடங்கி படவட்டம்மன் கோயில் தெரு, ரெக்ஸ் தெரு, தர்மராஜா கோயில் தெரு வழியாகச் சென்று சுங்குவார் அகிரகரம் தெருவில் நிறைவு செய்தார். உடன் மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறனும் இணைந்து உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்னும் 19 நாட்களில் தேர்தல் அனைவரும் இந்த அடிமை அரசை விரட்ட உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிமுகவை, அ(அடிமை)திமுக, அ(அமித்ஷா)திமுக என விமர்ச்சித்த உதயநிதி, நீட் தேர்வால் 15  மாணவர்கள் உயிரிழந்ததை நினைவு கூர்ந்தார்.  மோடியை எதிர்த்து கேள்வி கேட்க கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே.

ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த நீட் தேர்வை இந்த அடிமை ஆட்சி கொண்டுவந்து திணித்து துரோகம் செய்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவே அடிமை ஆட்சியை விரட்ட அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Must Read : வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு

 

அன்போடும், பாசத்தோடும், தலைவரின் மகனாய், கலைஞரின் பேரனாய்,  உங்கள் வீட்டுப்பிள்ளையாய், கேட்கிறேன்  உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Published by:Suresh V
First published: