வாயில் வடை சுடுவதுதான் மோடி ஆட்சி! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மகன் என்பதால் அழுத்தம் இல்லை எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மோடியின் ஆட்சி வாயில் வடை சுடும் ஆட்சி என்று தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

  தி.மு.கவின் இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அவர், தி.மு.கவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டப் பிறகு, முதன்முறையாக தி.மு.கவின் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

  சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

  7 மாநில துணைச் செயலாளர்கள், 64 மாவட்ட அமைப்பாளர்கள், 10 மாநகர அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் கலந்துகொண்டனர். கூட்டம் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க பிரமுகர்களுக்கும், நீட் தேர்வில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கும் இரங்கல் தீர்மானம், இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் தீர்மானம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்ளிடம் பேசிய தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளைஞர் அணியின் முதல் செயல் திட்டமாக இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது தான் இலக்கு.

  ஒரு தொகுதிக்கு 10,000 இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயலி அறிமுகம் செய்து அதன் மூலமாக இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளோம். செப்டம்பர் 14-ல் இருந்து நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் முகாம்கள் போடப்பட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

  இந்நிலையில் 16 முதல் 30 வரை என இருந்த இளைஞர் அணி உறுப்பினர்களின் வயது வரம்பை தலைமையின் ஒப்புதல் பெற்று 18 முதல் 35 வயது வரை மாற்றியமைத்து உள்ளதாகவும், முதன்முறையாக உறுப்பினர் அடையாள அட்டையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

  அதுமட்டுமின்றி தி.மு.க தலைவர் மகன் என்பதால் அழுத்தம் இல்லை எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது எனவும், உழைக்க தயாராக இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.  முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்வது குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் வெளிநாடு போய்விட்டு வந்ததற்கு பிறகு பார்க்கலாம் என பதில் அளித்தார்.

  அதுமட்டுமின்றி முதல் பணியாக இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படாத ஏரி குளங்களை தூர்வார உள்ளோம். முதலில் திருக்குவளையில் இருந்து அதனை தொடங்க உள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். மோடி ஆட்சியே வாயில் வடை சுடும் ஆட்சி தான். உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க இளைஞர் அணியின் பங்கு மேலோங்கியே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: