மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

 • Share this:
  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.

  இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தனுஷ் தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுஷ் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also read: நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் வேதனை!

  இந்நிலையில், மாணவர் தனுஷின் உடலுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏவும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

  இதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தோமோ அந்தத் துயரம் நடந்து விட்டது. நீட் தேர்வால் ஆண்டுதோறும் குழந்தைகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். நீட் தேர்வு வேண்டாம் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் பிடிவாதமாக உள்ளது.

  மாணவர் தனுஷ், நீட் தேர்வினால் தற்போது உயிரிழந்துவிட்டார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு, சட்டப்பேரவையில் நாளை மசோதா நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறார். மீண்டும் வலியுறுத்துவார். நீட் தேர்வு குறித்து சட்டப்போராட்டம் நடத்தி நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும்.

  பெற்றோர்கள், மாணவர்கள் மனம் தளர வேண்டாம். நிச்சயம் விடிவுகாலம் கிடைக்கும். நீட் தேர்வு விவகாரத்தில், அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். நீட் தேர்வினால் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப் படுகின்றனர். இது மாணவர்களின் பிரச்சனை என்பதால், இதில் திமுக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும். மாணவர்கள் தயவுசெய்து மனச்சோர்வு அடையாமல் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: