Home /News /tamil-nadu /

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 இளைஞர்கள் பலி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 இளைஞர்கள் பலி

மழை

மழை

Rain : தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் நேற்று மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகலில் வெயில் வாட்டி வதைக்க, மாலையில் பெய்த மழை, மக்களை குளிர்வித்தது. இதேபோல, கொடைக்கானலில் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செண்பகனூர், பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

    மதுரையில் கோரிப்பாளையம், தமுக்கம், நெல்பேட்டை, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது. நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழை, மதுரை மண்ணை குளிர்வித்தது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சாரல் மழை பெய்தது.

    தேனி மாவட்டம் பெரியகுளம், லட்சுமிபுரம், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடியில் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல, ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. கோடைமழையால், மானாவாரி பயிர் சாகுபடிக்கு தண்ணீர் வசதி கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Read More : இந்தி மாநிலம் மட்டும் போதும் என்று அமித் ஷா நினைக்கிறாரா? மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில், பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் மழையின்போது சாலையோரம் ஒதுங்கி நின்ற 3 இளைஞர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் ராமர் மற்றும் செல்லத்துரை ஆகிய இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும நிலையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Must Read : கனமழை காரணமாக தலைகீழாக கவிழ்ந்த போலீஸ் வாகனம்

    நாளை 10ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Meteorological Center, Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி