புதையலை தேடிப்பயணம்... காலி மனையில் 50 அடி ஆழ சுரங்கம் - தூத்துக்குடியில் பலியான உயிர்கள்

மாதிரிப்படம்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் புதையல் எனும் பேராசையால் இரு உயிர்கள் பலியாகியுள்ளது.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது மகன்களான சிவவேலன், சிவமாலை ஆகியோருடன் ஒரே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு பின்புறம் காலி மனை உள்ளது. அந்த இடத்தில் புதையல் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்தையா குடும்பத்தினர் ஊர் மக்களுக்கு தெரியாமல் வீட்டின் பின்புற புதையலை தேடி சுரங்கம் தோண்ட ஆரம்பித்துள்ளார். 50 அடிக்கு மேல் ரகசியமாக சுரங்கம் தோண்டியுள்ளனர்.

  ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முத்தையா குடும்பத்தினருடன் மேலும் இருவர் ரகுபதி, நிர்மல் இருவரும் இணைந்துள்ளனர். நேற்று மாலை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக முத்தையாவின் மருமகள் சுரங்கம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு ஒருவிதமான வாசணை வருவதை உணர்ந்த அந்தப்பெண் சுரங்கம் அருகில் செல்ல முயன்றுள்ளார். அவருக்கு மயக்கம் ஏற்படுவது போல் இருந்துள்ளது. உடனடியாக அங்கிருந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளனர்.

  இதனையடுத்து காவல்நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டதை முத்தையா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சுரங்கத்தில் இருந்து விஷவாயு வெளியேறுவதை உறுதிசெய்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சுரங்கத்தில் இருந்த 4 பேரையும் மீட்டனர். சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதி, நிர்மல் உயிரிழந்தனர். சிவவேலன், சிவமாலை இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டியதால் விஷவாயு வெளியேறி நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: