தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேரின் அடியில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலுக்கு சொந்தமான 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த கோவில் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், திருவிழா நடைபெறவில்லை.
இதனை தொடர்ந்து இந்தாண்டு காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10-ம் தேதி கூழ் ஊற்றுதல், கரகம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று திருவிழாவின் முக்கிய நாளில், தேர் ஊர்வலம் நடைபெற்றது.
18 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர் அப்பொழுது காளியம்மன் கோவிலை சுற்றி தேர் பவனி நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால், 30 அடி உயரமுள்ள தோ் விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து கூடியிருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, தேருக்கடியில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், சரவணன் இருவரும் உயிரிழந்தனர். மேலும் முருகன், மாதேஷ், பெருமாள் உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயங்களுடன் தருமபுாி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்தில் அடிபட்டவர்களை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்
தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர் திருவிழாவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.