மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த காட்டு யானைக்கு தீவைத்த இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த சுமார் 50 வயது மிக்க காட்டு யானையை விரட்ட ஊழியர்கள் அதன் மீது தீவைத்துள்ளனர். இதனால் காட்டு யானையின் தலை மற்றும் காது பகுதிகளில் தீப்பிடித்ததால் காட்டு யானை அலறி அடித்து ஓட்டம் பிடித்தது.
காட்டு யானை மீது தீ வைக்கப்பட்டதில் தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயங்கள் உடன் சுற்றி திரிந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத்(36) மற்றும் ரேமண்ட் டீன் (28) ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காட்டு யானையை விரட்ட தீவைத்து துணியை அதன் மீது வீசியதை விசாரணையில் ஓப்புக் கொண்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறை தேடி வருகின்றனர்.