வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் கோடிகளில் புரளலாம் என ஆசையைத்தூண்டி பல லட்சம் மோசடி.. இருவர் கைது...

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் கோடியில் புரளலாம் என ஆசையைத் தூண்டி பல லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் கோடிகளில் புரளலாம் என ஆசையைத்தூண்டி பல லட்சம் மோசடி.. இருவர் கைது...
மோசடி செய்து கைதான இருவர்.
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 2:35 PM IST
  • Share this:
கன்னியாகுமரி அடுத்துள்ள மார்த்தாண்டம் பகுதி ஆற்றூரைச் சேர்ந்தவர் மோகன் (42). இவர் சென்னை அடையாறு இந்திரா நகர் 24-வது குறுக்குத்தெரு பகுதியில் தங்கி ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள  டிரிம்பிள் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்யாண் என்ற நில புரோக்கர் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். மோகனிடம் பிரபாகரன் நல்ல முறையில் நட்பு பாராட்டி நமது நாட்டில் பேடிஎம் (Paytm) என்ற செயலி மூலம் பணப் பரிவர்தனை நடப்பதுபோல், வெளிநாடுகளில் Swiftglobalpay, instamerchantpay போன்ற போன்ற செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெற்று வருவதாகவும் இந்த செயலிகளின் wallet-ஐ பயன்படுத்தி இந்தியாவில் பணமாக்கிக் கொடுத்தால் நமக்கு நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் அவர் ஆசைவார்த்தைக் கூறி உள்ளார்.

இதனை நம்பிய மோகன் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், பிரபாகரனின் நண்பரான பெங்களூரைச் ரமேஷ் ரெட்டி கொடுத்த இணையதள முகவரி மூலமாக அந்த இரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்து அக்கவுண்ட் தொடங்க முயற்சித்துள்ளார். ஆனால், அக்கவுண்ட் தொடங்க முடியவில்லை. இதனால் ரமேஷ் ரெட்டி வெளிநாடுகளிலுள்ள தனது நண்பர் மூலமாக மோகன் பெயரில் இரண்டு அக்கவுண்ட் ஓபன் செய்து கொடுப்பதாகவும் பின்பு அதனை நாம் இந்தியாவில் பயன்படுத்தலாம் என்றும் ஐடியா கொடுத்துள்ளார். இதேபோல மோகனுக்கு இரு செயலிகளிலும் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விஜய் வீட்டில் இருந்து வந்த அழைப்பு


பின்னர் சில தினங்கள் கழித்து இரண்டு அக்கவுண்டிலும் 40 லட்சம் டாலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக மாற்றி 2 கோடி ரூபாய் எங்களுக்குத் தர வேண்டும் எனவும் ரமேஷ் ரெட்டி மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோகனிடம் கூறியுள்ளனர். ஒருவார காலம் முயற்சி செய்தபோதும் மோகனால் அந்தப் பணத்தை எடுக்கவும் முடியவில்லை, பரிவர்த்தனையும் செய்ய முடியவில்லை.

பின்னர் தனது சொந்த ஊரான மார்த்தாண்டம் அடுத்த ஆற்றூக்குச் சென்றுள்ளார். மோகனிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் மோகனின் சொந்த ஊரான மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூருக்கு ரமேஷ் ரெட்டி மற்றும் பிரபாகர் கடந்த 8-ஆம் தேதி காரில் சென்றுள்ளனர்.அங்கு மோகனை தனியாக பேச வரவழைத்து 40 லட்சம் டாலரை பெற்றுக்கொண்டு எங்களிடம் பணத்தைத் தராமல் ஏமாற்றுகிறாயா எனக்கூறி அவரை காரில் கடத்தியுள்ளனர். மேலும், உடனடியாக எங்களுக்கு தற்போது ரூபாய் 50 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், கொடுக்கவில்லை என்றால் இங்கேயே உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும் ரமேஷ் ரெட்டியும் பிரபாகரனும் மோகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.பயந்துபோன மோகன் தற்போது தன்னிடம் பணம் இல்லை எனவும் சென்னைக்கு அழைத்துச் சென்றால் தன்னால் முடிந்த அளவு பணத்தை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மோகனை காரிலேயே சென்னைக்குக் கடத்தி சென்றுள்ளனர். சென்னை வந்ததும் தனது மனைவி மற்றும் தன்னுடைய நகைகளை அடகு வைத்து ரூபாய் 10.15 லட்சம் பணத்தை ரமேஷ் ரெட்டியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், தனியார் வங்கியில் வீட்டுக் கடனுக்காக வாங்கிய ரூபாய் 5.60 லட்சம் பணத்தை இரு தினங்களில் மூன்று தவணையாகக் கொடுத்துள்ளார்.

இதன் பிறகு, ரமேஷ் ரெட்டியும் பிரபாகரனும் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மோகன் அந்த இரண்டு செயலிகளைப் பற்றி இணையதளத்தில் ஆராய்ந்தபோது அவை போலியானவை என தெரியவந்தது.

இதனையடுத்து, அடையாறு சைபர் க்ரைம் பிரிவில் அவர் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், பிரபாகர் மற்றும் ரமேஷ் ரெட்டியின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்தபோது அவர்கள் இருவரும் தி.நகரில் ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading