தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்!

ஆக்சிஜன் ஆலை

தமிழகத்துக்கு சிங்கப்பூர், பூனே உள்ளிட்ட இடங்களில் இருந்து  14000 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் வாங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க டி.வி.எஸ், எல்.என்.டி, ஹூண்டாய் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

  தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய தொழில்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

  அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தாா நிறுவனத்தின்  மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தற்காலிகமாக திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியது, நான்கு மாதம் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் திறக்க அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு, வேதாந்தாா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அதன் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கியிருக்கும் நிலையில, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டுவரும் நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது, இருப்பினும் தற்போது உள்ள சூழலில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை தமிழகத்தில் அதிகமாக உள்ளது,

  இந்நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அந்த வகையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹூண்டாய்யின் துணை நிறுவனமான ஹூண்டாய் குளோவிஸ் (Hyundai Glovis) நிறுவனமும், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செயிண்ட் கோபின் (saint gobin) நிறுவனமும், செங்கல்பட்டு, கோவை, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் எல்&டி. (L&T) நிறுவனமும்
  நெல்லை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் டி.வி.எஸ் (TVS) நிறுவனமும், நெல்லை மருத்துவமனையில் பே.டி.எம்( PayTM) நிறுவனமும், விருதுநகர் மருத்துவமனை சார்பில் டைம்லர் (Daimler) நிறுவனமும் முன்வந்துள்ளன.

  மேலும் என்எல்சி நிறுவனம் சார்பில் மூன்று அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்துக்குள் இந்த நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் தமிழகத்துக்கு சிங்கப்பூர், பூனே உள்ளிட்ட இடங்களில் இருந்து  14000 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் வாங்கவுள்ளதாகவும், துபாய், சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7600 ஆக்சிஜன் சிலிண்டர்களும் தமிழகம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: