ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மஞ்சளை கடத்திய கும்பல் - என்ன காரணம்...?

வழக்கமாக கடல் அட்டை, கஞ்சா என இலங்கைக்கு கடத்திவிட்டு, அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவது நடக்கும். ஆனால் முதல் முறையாக மஞ்சளை ஒரு கும்பல் இலங்கைக்கு கடத்த முயன்று சிக்கியுள்ளது. எதற்காக மஞ்சள் கடத்தப்பட்டது?

  • Share this:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெற உள்ளதாக காவல்துறை தனிப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ராமேஸ்வரம் அருகேயுள்ள வேதாளை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆம்னி வேனில் சாக்கு மூட்டைகளை ஏற்றுவதை பார்த்தனர். அவர்களை சுற்றி வளைத்தபோது வேன் ஓட்டுனர் தப்பி ஓடியுள்ளார். மற்ற மூன்று பேரையும் போலீசார் பிடித்தனர்.

ஆம்னி வேனில் இருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் இருந்துள்ளது. அந்த மஞ்சளை இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக அவர்கள் வேனில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.


அவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த படகு உரிமையாளர் 50 வயதான ஆர்ம்ஸ்ட்ராங், வேதாளையைச் சேர்ந்த 35 வயதான அப்துல் முபாரக், பாம்பன் குந்துகால் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பாபு உசேன் ஆகியோர் என தெரியவந்தது.

அவர்களிடம் மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயன்றது ஏன் என போலீசார் விசரித்தபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது. இலங்கையில் உள்ள ஹக்கீம் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் முபாரக்கை தொடர்பு கொண்டுள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மஞ்சளுக்கு அதிக தேவை இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள், இலங்கையில் 2500 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறியுள்ளார். அதனால் 600 கிலோ மஞ்சள் அனுப்பினால், அதற்கு ஈடாக 6 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகளை தருவதாக தெரிவித்துள்ளார்.அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு படகு மூலம் பாம்பன் குந்துகால் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு மஞ்சளை கடத்தை முயன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை அடுத்து 600 கிலோ மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆம்னி வேன் ஒட்டுநரை தேடி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட மஞ்சள் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பார்வையிட்டார்.

மேலும் படிக்க...

Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜூலை 24, 2020)

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி வழியாக கஞ்சா, தங்கம் மற்றும் பெரிய பொருட்கள் கொண்டு சென்ற நிலையில் முதல் முறையாக மஞ்சளை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading