முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துயர்மிகு நேரம்.. என் இதயம் இரங்குகிறது.. துருக்கி, சிரியா மக்களுக்காக உருக்கமாக பதிவிட்ட முதல்வர்..!

துயர்மிகு நேரம்.. என் இதயம் இரங்குகிறது.. துருக்கி, சிரியா மக்களுக்காக உருக்கமாக பதிவிட்ட முதல்வர்..!

முதலமைச்சர் ஸ்டாலின் - துருக்கி நிலநடுக்கம்

முதலமைச்சர் ஸ்டாலின் - துருக்கி நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600-ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மீட்புப்பணிக்கு உதவ முன்வந்துள்ளன.

உலகில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் மண்டலங்களில் ஒன்றாக இருக்கும் துருக்கியில், அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டாலும், நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. துருக்கி - சிரிய எல்லையில் உள்ள காசியான்டெப் நகரை மையமாகக் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 8-ஆக பதிவான நிலநடுக்கத்தால், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மாலத்யா(Malatya) நகரில் மக்கள் சாலையில் தஞ்சமடைந்திருந்த போது, கட்டடம் இடிந்து விழுந்ததால் அவர்கள் பதறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காசியான்டெப் (Gaziantep) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நிலநடுக்கத்தால் பொருட்கள் சிதறி விழும் காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது. துருக்கியின் அதானா, குகுரோவா, மலாத்யா நகரங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. காணும் இடமெல்லாம் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டதையடுத்து, துருக்கி ராணுவத்துடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் களமிறங்கினர்.இந்நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 6 அலகுகளாக அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. தியர்பகீர் (Diyarbakir) பகுதியில் மீட்புப் பணியின் போது சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

துருக்கியைப் போலவே சிரியாவின் பல்வேறு இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெஸ்னயா என்ற கிராமத்தில் இருந்த பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக சிரியாவுக்கு விரைந்த ரஷ்ய ராணுவனத்தினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்களும், மருந்துகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

துருக்கிக்கு மீட்புப்படை மற்றும் மருத்துவக்குழுவை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதனிடையே, டெல்லியில் உள்ள துருக்கி தூதரகத்திற்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆறுதல் தெரிவித்தார். துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைப்போல, தற்போதைய நிலநடுக்கமும் துருக்கி வரலாற்றில் வடுவாக மாறியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அளவிலான உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சேதங்கள் வேதனையளிக்கிறது.

இந்தத் துயர்மிகு நேரத்தில் என் இதயம் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் மக்களுக்காக இரங்குகிறது. நாம் அனைவரும் ஒருமித்து நின்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவோம்” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: MK Stalin, Turkey Earthquake