முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம்: டி.டி.வி.தினகரன் திடீர் அறிவிப்பு

மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம்: டி.டி.வி.தினகரன் திடீர் அறிவிப்பு

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அ.ம.மு.க கட்சி சார்பில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

  • Last Updated :

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட ஜெயலலிதா தலைமையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட அ.தி.மு.க தற்போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், ‘சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதன்தொடர்ச்சியாக ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். அதனால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தென்மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலாவை அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்கள் சந்தித்துவரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில், சசிகலா இன்று வெளியிட்ட அறிகிகையில், ‘தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்’ என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்தொடர்ச்சியாக கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த டி.டி.வி.தினகரன், ‘மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா திருப்பெயரைத் தாங்கி, அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி செயல்பட்டுவரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக மாவட்டங்கள் வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் வரும் மார்ச் 18-ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன.

தொண்டர்களின் ஏக்கங்கள், முழக்கங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் - வி.கே. சசிகலா

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றுவரும் கழகப் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்தக் கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதுடன் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: ADMK, AMMK, TTV Dhinakaran