எந்த வீட்டில் பெண்களிடம் அதிகாரம் இருக்கிறதோ அந்த வீட்டின் ஆண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சி.ஆர்.சர்ஸ்வதி, வளர்மதி ஜெபராஜ் மற்றும் மகளிர் அணியை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டி.டி.வி.தினகரன், ‘மறைந்தாலும் தமிழ் பேசும் மக்கள் உள்ளத்தில் அம்மா தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல மாபெரும் தலைவர்கள் உருவாகவில்லை. உருவாகவும் முடியாது. அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப காலம் சிலரை அடையாளம் காட்டும். அவர்களைப் பின்தொடர்ந்து வர முடியுமே தவிர அவர்களாக மாற முடியாது. ஜெயலலிதாவை, எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிட்டு பேசும்போது எனக்கு சிரிப்புதான் வரும்.
அ.தி.மு.கவின் கோட்டையென்று மார்தட்டிக் கொள்ளும் ஈரோட்டில் ஐந்து தொகுதிகளில் அம்மா வெற்றி பெற்றார்கள். பல நூறு கோடி செலவு செய்தும் இரட்டை இலை சின்னம் இருந்தும், திமுக கூட்டணி 66,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்துடன் இன்று வெற்றி பெற்றுள்ளது. கடந்த 21 மாத ஆட்சி காலத்தில் தி.மு.க மீது பல கெட்ட பெயர்கள் எழுந்தும், இரட்டை இலை சின்னம் இருந்தும் மேற்கு மண்டலம் கோட்டையாக இருந்தும் திமுகவின் மாபெரும் வெற்றியைத் தடுக்க முடியவில்லை என்று பேசினார்.
இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே அம்மாவின் தொண்டர்கள் அங்கிருந்து வர முடியாமல் இருக்கிறார்கள். துரோகியின் கையில் கழகம் இருப்பதை அம்மாவின் தொண்டர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்க்கும் காலம் வரும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் வருமானத்திற்காக வந்தவர்கள் அல்ல. சுயலாபத்திற்காக ஒரு சிலர் வேறு இடத்திற்கு சென்று இருக்கலாம். முதிர்ச்சியின்மையால் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் நம்மை விட்டு சென்று விட்டார்கள். சிறுவயதில் இருந்து என்னுடைய அம்மா மற்றும் பாட்டியின் கண்டிப்பில் வளர்ந்தவன் நான்.
இப்போது என் மனைவியும், என் மகளும் தான் என் எஜமானார்கள். கல்யாணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை நான் தனியாக துணி கூட எடுத்ததில்லை. எனக்கு டெய்லர் கூட அவர்கள் சாய்ஸ் தான் என்று தன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரிணி ஆகியோர் குறித்து பேசினார்.
இன்று கூட என் மனைவியிடம் என்ன சட்டை போட வேண்டும் என கேட்டு தான் போட்டுக் கொண்டு வந்தேன். எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆண்கள் எல்லாம் நிம்மதியாக இருப்பார்கள். ஓராண்டு சிறையிலிருந்தபோது என் குடும்பத்தை தைரியமாக பார்த்துக் கொண்டவர் என் மனைவி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.
மேலும் ஒரு பாஜக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.