சென்னை தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரி அரசாங்கம் கவிழ்ந்ததற்கு, சிறுபான்மை மக்களின் காவலர் என்று சொல்லிக்கொள்ளும் திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டி, மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரலில் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை தாம்பரம் சண்முக சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகின்றது. கொரோனா என்கின்ற கொடிய அரக்கனிடம் இருந்து நாம் தப்பிக்கும்வரை முகக்கவசம் அணிய வேண்டியது முக்கியம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எங்கு சென்றாலும் அவர்களின் திருவுருவகொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கின்றது.
இந்த இயக்கத்தின் தொடக்கம் இந்த கூட்டத்தின் தொடக்கம்தான். தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலே அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே உருவாக்க கூடிய கூட்டம் இங்கே கூடி இருக்கின்றது.
சில பேர் என்னைப் பார்த்து கூறுகின்றார்கள், தினகரன் ஒரு தனி மரம் என்று. அன்று சசிகலா வந்த காரில், அதிமுக கொடியை கழட்டுவதற்காக வந்த சூரப்புலி அவர் மீது, சக பெண் அதிகாரி கொடுத்த குற்றச்சாட்டு, யார் மீது ஒரு சிறப்பு டிஜிபியின் மீது, இன்று அவர் பதவியில் இல்லாமல் இருக்கின்றார். இப்போது வந்து கொடியை கழட்ட சொல்லுங்கள் பார்ப்போம்.
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நான்கு வருடமாக ராஜதந்திரம் என்கின்ற பெயரில் இயங்கும் ஆட்சி, அதிகாரத்தில் மேலே இருக்கின்றவர்கள் தயவில் நடக்கும் ஆட்சி, இது நாங்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சி. காலம் நேரம் கூடினால் கழுதை கூட குதிரை என்று சொல்லி இருக்கின்றார்கள்.
நேரம் வந்துவிட்டது, இன்னும் 10 நாட்களில் தேர்தல் குறித்த ஆணையை, தேர்தல் ஆணையம் அறிவித்து விடும். கொடியை கழட்டின அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கும், இவர்களுக்கு வால் பிடித்தவர்களுக்கும் ஏற்படும். இவர்களுக்காக சட்டத்தை மீறியவர்களுக்கும் இதே கதிதான். தமிழக மக்கள் அவர்கள் அனைவரையும் ரோட்டில் நிறுத்துவார்கள்.
மீண்டும் அம்மாவின் ஆட்சியை, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்.
திமுக பத்து வருடமாக அம்மா இருக்கும் வரை, ஒன்றும் செய்ய முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பாடு படுத்தும், ஒரு பிரியாணி கடையை கூட விட்டு வைப்பதில்லை. பெண்களுக்கான பியூட்டி ஷாப் கூட அவர்கள் விடவில்லை. டீக்கடை மற்றும் பஜ்ஜி கடை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. இவர்கள் கையில் ஆட்சி வந்தால், ஒருவர் கூட வீட்டில் இருக்க முடியாது. வீட்டில் இருந்தவர்கள் அனைவரையும் வெளியே துரத்தி விடுவார்கள்.
திமுகவில் இருப்பவர்கள், வட்டத்தில் இருந்து மாவட்டம்வரை அவர்கள் மட்டும்தான் காவல்துறையினராக இருப்பார்கள். அம்மா ஆட்சியில் இதையெல்லாம் செய்ய முடியுமா? இப்போது இருப்பது அம்மா ஆட்சி அல்ல, இப்போது எது வேண்டுமானாலும் செய்யலாம். பெட்டியோடு சென்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம். காசு கொடுத்தால் பதவியைக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள்.
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விட்டால், தமிழ்நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்பதை தயவுசெய்து மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் செய்வதே எங்களது ஒரே நோக்கம். அதற்காக அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கொரோனா காலத்தில் அமமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், அமமுகவில் நானும் ஒரு தொண்டன் தான். நான் விளம்பரம் செய்யக்கூடிய அரசியல்வாதி அல்ல. அம்மாவின் உண்மையான ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். வெட்டி விளம்பரத்துக்காக நான் நடிப்பவன் அல்ல. அம்மாவுடன் இருந்தவர்கள் நரிக்கூட்டம் போன்று, நடந்துக்க முடியுமா? நடந்துக்க வருமா? புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
கொரோனா காலத்திலே எந்த ஒரு அரசு பணியும் அரசுத் திட்டங்களும் நடைபெறவில்லை. அதற்காக ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி இருப்பதாக கூறுகின்றார்கள். இந்த ஒரு வருடத்தில் ரு. 1,70,000 கோடி நஷ்டம் வந்தது என்கின்றனர். அந்த பணத்தை என்ன செய்தார்கள் பணத்தை கரையான் அரித்து விட்டதா? 2015-ல் வந்ததுபோல், வெள்ளமோ புயலோ வரவில்லை. வருங்காலத்தில் இதற்கெல்லாம் பதில் இருக்கின்றது.
நம்முடைய செல்போன் காணாமல் போனால் நாம் சும்மா இருப்போமா? இந்தக் கூட்டத்தில் வந்தவர்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருங்கள். கையில் வைத்திருக்கும் பர்சை கூட விட்டு வைப்பது கிடையாது அந்த பார்ட்டிகள். இன்னும் 10 நாட்களில் ஆட்சி முடியப் போகின்றது. ஒரு மேதாவி சொல்லுகின்றார் 200 கோடி செலவு செய்துவிட்டு சின்னம்மாவை வரவேற்றோம் என்று, அவர் பணத்தை கொடுத்து அனுப்பியது போல் கூறுகிறார்.
23ஆம் புலிகேசி போல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் என் மீது வழக்குப் பதிவு செய்கின்றார்கள். எல்லா வழக்கையும் வைத்துக் கொள்கின்றேன் தேர்தலுக்குப் பின்பு நீங்கள் பதிவு செய்த வழக்கிற்குகள் எல்லாவற்றுக்கும் நீங்களும்தான் வரவேண்டும். நீங்கள் எல்லாம் அமைச்சர் பதவியில் இருப்பதால் அரசாங்க வழக்கறிஞர்கள் வருகின்றீர்கள் இரண்டு மாதம் கழித்து நீதிமன்றத்திற்கு நீங்களும் வரவேண்டும்.
பாண்டிச்சேரியில் நாராயணசாமி அண்ணா ஆட்சி நன்றாகவே நடத்திக்கொண்டிருந்தார். ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை விட்டு விலகினார். எப்பொழுதும் பிஜேபி கவுக்கதான் செய்வார்கள். ஒரு திமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். காரணமென்ன என்று யாரும் அதைப் பற்றி பேசுவது கிடையாது. இதை எதற்காக சொல்லுகின்றேன் என்றால், சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களை பாதுகாப்போம் என்று திமுகவினர் சொன்னார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாண்டிச்சேரி அரசு கவிழ்ந்ததற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றும், இதை சிறுபான்மை மக்கள் தயவுசெய்து எண்ணி பார்க்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டிய டிடிவி தினகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப்போல் பேசினார்.
Must Read : மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa, TN Assembly Election 2021, TTV Dhinakaran