இலவசங்களை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விட , அவர்களே சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இன்று வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளார். அதற்காக நேற்று கோவில்பட்டிக்கு வந்த டி.டி.வி.தினகரன் செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கரை வைத்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவில்பட்டி தொகுதி மக்கள் எங்களுக்கு மாபெரும் ஆதரவளித்து நல்லதொரு சிறப்பான வெற்றியை தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு ஏழு லட்சம் கோடி கடனில் உள்ளது. தற்போது இலவச திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை, இலவசங்களை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விட, அவர்களே சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாகக்கூடிய திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கி உள்ளது.
குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் திட்டம்தான் வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். தமிழக மக்கள் தன்னிறைவு பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்பதுதற்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் அதை நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று அதனை நிறைவேற்றும்.
இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகளை சுற்றுப் பயணத்தின்போது கூறுவேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 60 தொகுதியில் போட்டியிடுகிறது. கூட்டணி வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது. பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும், புதிய மதுபான தொழிற்சாலைகள் தொடங்க படாது.
Must Read : தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாச்சலத்தில் பிரமேலதா போட்டி - விஜயகாந்த் போட்டியில்லை
இருக்கின்ற ஆலைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கூறினார் டிடிவி. தினகரன்.