வாக்குப் பதிவு நாளன்று கவனமாக இருக்கவேண்டும் - தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

வாக்குப் பதிவு நாளன்று கவனமாக இருக்கவேண்டும் - தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

டி.டி.வி.தினகரன்

நாளை வாக்குப் பதிவு தொடங்கும் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நிறைவடையும் மாலை 7 மணிவரை வாக்குச் சாவடியில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.

 • Share this:
  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுக்க சுற்றிவந்து சில கோடி தமிழ் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகச்சிறந்த ஆளுமையாக வாழ்ந்து வரலாறு படைத்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டு நலன்களைப் பாதுகாக்கும் வல்லமைகொண்ட ஓர் ஆளுமையை அவர்கள் தேடுவதை அந்த மக்களின் கண்களில் நான் கண்டேன்.

  தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோவது பற்றியோ, தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படுவது பற்றியோ துளியளவு கூட கவலைப்படாமல், மக்கள் பணத்தைச் சுரண்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட துரோகிகளையும், பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட தீய சக்திகளையும் அடுத்த தலைமுறைக்கான ஆளுமையாக மக்கள் நினைக்கவில்லை என்பதையும் இந்தப் பிரச்சாரப் பயணத்தின்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

  இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை காப்பாற்றுவது மட்டுமல்ல, எதிர்கால தமிழகத்துக்கான ஆளுமையாக நம் இயக்கத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் என்னால் உணர முடிந்தது. அந்த இலக்கை அடைவதற்கான ஜனநாயக ஆயுதமான அ.ம.மு.கவை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்ததன் அடையாளமாகத் தான் பிரச்சாரம் சென்ற இடங்களிலெல்லாம் லட்சோப லட்சம் மக்கள் திரண்டு நின்று நம்மை வரவேற்ற நிகழ்வுகள் அமைந்துள்ளன.

  இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் என்று முன்னிறுத்தப்படுபவர்கள் பண பலத்தை மட்டுமே நம்பி களம் காணும்போது, நமது இயக்கம்தான் மக்கள் மீது நம்பிகைக வைத்து களத்தைச் சந்திக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு செயல்வடிவம் தரும் வகையில் நமக்கான மக்களின் ஆதரவை வாக்குகளாக பணியில் நீங்கள் ஓய்வு இல்லாமல் செயல்படுவதை நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பின் தொடர்ச்சியாக மிக முக்கியமான இன்னும் ஒருநாள் உழைப்பு மீதமிருக்கிறது.

  இவ்வளவு பணபலத்தைக் கொட்டியும் தமக்கு ஆதரவு பெருகவில்லையே என்ற ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கும் துரோக சக்திகளும் தீய சக்திகளும் வாக்குப் பதிவு நாளன்று சில பல சில்மிஷங்களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற தவறுகள் நடைபெற சிறிதளவு வாய்ப்பு இல்லாதபடி நாளை வாக்குப் பதிவு தொடங்கும் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நிறைவடையும் மாலை 7 மணி வரை வாக்குச் சாவடியில் மிக கவனமாக இருந்து நமக்கான மக்கள் ஆதரவு சேதாரமில்லாமல் நம்மை வந்தடையும் வகையில் விழிப்போமும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் இருந்து கடமையாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: