இலங்கை அரசு சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் - டி.டி.வி.தினகரன்

தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது என தினகரன் கூறியுள்ளார்

தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது என தினகரன் கூறியுள்ளார்

  • Share this:
    இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    2009ம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப்போரில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.



     

    இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.

    இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது. தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என கூறியுள்ளார்.

    முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்புக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     



     
    Published by:Arun
    First published: