சீமான் தந்தை செந்தமிழன் மறைவு - டி.டி.வி.தினகரன், பாரதி ராஜா இரங்கல்

பாரதிராஜா, டி.டி.வி.தினகரன்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை மறைவுக்கு டி.டி.வி.தினகரன், பாரதிராஜா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரைப்பட இயக்குநர் சீமான் இருந்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீமான் இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திவருகிறார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

  சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் வசித்துவந்தார். அவர், இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமானின் தந்தையார் செந்தமிழன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். சீமானின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் செந்தமிழன் மறைவால் வாடும் சீமானுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  இயக்குநர் பாரதிராஜா ட்விட்டர் பதிவில், ‘என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை செந்தமிழனின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: