முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு... சசிகலா, டிடிவி தினகரன் இரங்கல்..!

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு... சசிகலா, டிடிவி தினகரன் இரங்கல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

ஓபிஎஸ் தாயாரின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து தேனி சென்றார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது தாயாரின் முகம் பார்த்தும் காலை பிடித்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.

இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்  தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தனது தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ஓபிஎஸ் தாயாரின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ‌பிஎஸ் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு  குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

First published:

Tags: O Pannerselvam, TTV Dhinakaran, V K Sasikala