”மீள முடியாத ஆழிப்பேரலை சோகம்” சுனாமி பேரழிவின் 16-ம் ஆண்டு நினைவு தினம்

கோப்பு படம்

சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக, தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 • Share this:
  தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக மீனவர்களும், பொதுமக்களும் சுனாமியின் வடுக்களை இன்னும் மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.
  இந்த சுனாமி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக கடலோரத்தை சின்னா பின்னமாக்கிய ஆழிப்பேரலை, நாகை மாவட்டத்தை விட்டு வைக்கவில்லை. 

  இம்மாவட்டத்தில் மட்டும் 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றவர்களும் ஆழிப்பேரலையின் கொடுங்கரங்களுக்கு தப்பவில்லை. சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர்.

  சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக, தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிலர் சுனாமியில் பறிகொடுத்த தங்களது சொந்தங்களின் நினைவாக கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
  இயற்கைச் சீற்றங்களால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் மக்கள் மனதில் காலத்திற்கும் மாறாத வடுக்களை பதியவைத்துவிட்டுச் செல்கின்றன.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: