திருச்சி அருகே ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி அரிசியை எண்ண வைத்து நகையுடன் தப்பிய மர்ம நபர்கள்!

news18
Updated: August 17, 2019, 11:17 AM IST
திருச்சி அருகே ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி அரிசியை எண்ண வைத்து நகையுடன் தப்பிய மர்ம நபர்கள்!
கோப்புப் படம்
news18
Updated: August 17, 2019, 11:17 AM IST
மணப்பாறையில் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடம் நூதன முறையில், மர்ம நபர்கள் இருவர் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளப்பொண்ணு. இவரது மருமகள் மீனாவுடன் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர்.

அவர்களை நம்பிய மாமியார், மருமகள் இருவரும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். மாமியார், மருமகளின் பெயர், பிறந்த தேதி, ராசி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த அந்த நபர்கள், இருவருக்கும் சில பிரச்னைகள் இருப்பதாக கூறியதோடு, அதை தீர்க்காவிட்டால், குடும்பம் மேலும் சீரழியும் எனக் கூறியுள்ளனர்.


இதனால் மிரண்டு போன பெண்கள் இருவரும், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என அப்பாவியாக கேட்டுள்ளனர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர்கள் இருவரும், மாமியார், மருமகள் இருவரும் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, தாங்கள் கூறும் பரிகாரத்தை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அந்த பரிகாரம் செய்யும்போது, நகைகளை அணிந்திருந்தால், பலன் தராது என்றும் கூறியதால், அதை நம்பிய வெள்ளப் பொண்ணுவும், அவரது மருமகள் மீனாவும் தாங்கள் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்தனர்.

அப்போது மீனா தான் அணிந்திருந்த தாலி சங்கிலியையும் ஜோதிடர்கள் கூறியதுபோல் கழற்றி வைத்துள்ளார். அப்போது இருவரது கையில் சிறிதளவு அரிசியை கொடுத்த ஜோதிடர்கள், தனித்தனியாக ஒரு அறைக்குள் சென்று எண்ணுமாறு கூறியுள்ளனர்.

Loading...

அரிசியை வாங்கிய மாமியார், மருமகள் இருவரும், தனித்தனி அறைகளுக்குள் சென்று அரிசிகளை மிகத் தீவிரமாக எண்ணி முடித்தனர்.

அதன் எண்ணிக்கையை கூறுவதற்காக வெளியே வந்தபோது, ஜோதிடர்கள் இருவரும் அங்கிருந்து மாயமாகியிருந்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த வெள்ளப்பொண்ணுவும், அவரது மருமகள் மீனாவும் தாங்கள் கழற்றி வைத்து நகைகளும் காணாமல் போனதை கண்டனர்.

இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், ஜோதிடம் பார்ப்பதாக வந்து, நகைகளை நூதனமாக திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...