லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் வடமாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம்? திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் லலிதா ஜூவல்லரியின் கொள்ளை வழக்கில் வட மாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் வடமாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம்? திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்!
லலிதா நகைக்கடையினுள் கொள்ளையடிக்குக் கொள்ளையர்கள்
  • News18
  • Last Updated: October 3, 2019, 12:20 PM IST
  • Share this:
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் வட மாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நியூஸ் 18-க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி, 3 தளங்களுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் 4 காவலாளிகள் கடைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

காலையில் மீண்டும் கடையை திறந்து பார்த்த போது, தரைதளத்தில் இருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தகவல் அறிந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ்,  உதவி துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

லலிதா ஜூவல்லரிக்கும், ஜோசப் கல்லூரியின் கட்டிடங்களுக்கும் இடையே உள்ள பகுதி பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.இதனால், அந்த இடத்தை அருகில் உள்ள அபார்மெண்ட் வாசிகள் தற்போது கார் நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை கண்காணித்து தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருந்து பின் பக்க சுவரில் வெல்டிங் மெஷின், கடப்பாரை ஆகியவற்றை பயன்படுத்தி  துளையிட்டுள்ளனர். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவரில் துளையிட்டு அந்த வழியாக முகமூடியும், கையுறைகள் அணிந்து கொண்டு கடைக்கு உள்ளே  நுழைந்துள்ளனர்.

Loading...

கொள்ளையர்கள் அதிகாலை நாலரை மணி வரை அதாவது இரண்டு மணிநேரம் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 2 மணி நேரத்திற்குள் தரைதளத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், மற்றும் பிளாட்டின நகைகளை கொள்ளையடித்துள்ளனர். எனினும், எடை அதிகமாக இருந்த நகைகளை மட்டுமே எடுத்துச் சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த மூக்குத்தி, மோதிரம் ஆகிய சிறிய நகைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

பைகளில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள், நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க வழியெங்கும் மிளகாய் பொடி மற்றும் ரசாயனப் பொடியை தூவி விட்டு சென்றனர்.

கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இரண்டு கொள்ளையர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்றிருப்பது பதிவாகியுள்ளது. குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் முகமூடியை அணிந்தவாறு இரு நபர்கள் நகைகளை அள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கடையின் பின்பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் முகம் சரியாக பதிவாகவில்லை.

அதே நேரத்தில் வெளியில் மேலும் சில கொள்ளையர்கள், கண்காணிப்புக்காக இருந்திருக்கலாம் என் போலீசார் சந்தேகிக்கின்றனர். கடை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கரூர் சாலை வரை ஓடி நின்றது. இதனால் கொள்ளையர்கள் கரூர் சாலை வழியாக தப்பியிருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மாநகராட்சியில் இருக்கும் சிசிடிவிகளையும் ஆய்வு செய்கின்றனர்

கடைக்கு பணிக்கு வந்த 160 பணியாளர்களின் கைரேகையை பதிவு செய்யும் போலீசார், விடுமுறையில் உள்ள ஊழியர்களை கடைக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். 12 காவலாளிகளில் நேற்று பணிக்கு வராத 3 காவலாளிகளையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லலிதா ஜூவல்லரியின் பின் பக்க பகுதியில் ஏதேனும் தடயங்கள் சிக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கொள்ளை வழக்கில் வட மாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்ளையர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றும் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: October 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...