திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை: தப்பியோடிய சுரேஷ் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை: தப்பியோடிய சுரேஷ் கைது
  • Share this:
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையை அரங்கேற்றியது குறித்த தகவல்களை கைதான மணிகண்டன் கூறியுள்ள நிலையில், இரண்டாவது நபர் சுரேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நகைகள் கொள்ளை போனதற்கு அடுத்த நாள், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் நிற்காமல் சென்றுள்ளனர்.

அதனால் சந்தேகமடைந்த திருவாரூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாரத் நேரு அந்த இருவரையும் விரட்டிச் சென்றுள்ளார். அவர்களில் ஒருவர் மட்டுமே பிடிபட மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.


அப்படி பிடிபட்டவர்தான் திருவாரூர் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன். தப்பி ஓடியவர் அவரது கூட்டாளி சுரேஷ்.

இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 4 கிலோ தங்க நகைகள் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிக்கிய மணிகண்டனோ மிகவும் சாதாரணமாகவே இருந்துள்ளார். நகை குறித்து போலீசார் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட போதும் சளைக்காமல் சமாளித்துள்ளார் மணிகண்டன்.

ஆனால் நகைகளில் அகற்றப்படாமல் இருந்த பார்கோடு அது லலிதா ஜூவல்லரி நகை என்பதை உறுதிப்படுத்தியது.கொள்ளையடித்த நகையின் பார்கோடை அகற்ற நேரமில்லை என கூலாக பதில் அளித்திருக்கிறார் மணிகண்டன்.அத்துடன் வட மாநிலத்தவர்கள் பக்கம் போலீசாரின் கவனம் இருந்ததால் தாங்கள் சிக்கமாட்டோம் என நினைத்தே தனது பங்கு நகையுடன் பைக்கில் சாவகாசமாக சுற்றியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகையை திருட பேன்சி ஸ்டோரில் பொம்மை முகமூடி வாங்கியதாகவும் ஜாலியாக கூறியுள்ளார் மணிகண்டன்.

காஸ்ட்லி முகமூடிகள் முக வடிவத்தை காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அவற்றை பயன்படுத்தவில்லை என்றும் கொள்ளை குறித்த நுணுக்கமான தகவல்களையும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அத்துடன் கடை குறித்து நன்கு விசாரித்தே கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் சொல்லியுள்ளதால் கடை ஊழியருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உள்ளே இரண்டு பேர் சென்ற நிலையில் ஆள் வந்தால் சிக்னல் கொடுப்பதற்காக வெளியில் ஒருவரையும் நிறுத்தியுள்ளனர். சத்தம் போட்டு சிக்னல் கொடுத்தால் தெரிந்துவிடும் என்பதால் காலில் கயிரை கட்டிக் கொண்டு கொள்ளையடித்துள்ளனர் இந்த கில்லாடிகள்.

ஆள் வந்தால், வெளியில் இருப்பவர் தன்னிடம் உள்ள கயிறை இழுத்து சிக்னல் கொடுப்பார் . இந்த ஒட்டுமொத்த சம்பவம் நடந்த போதும் யாருமே செல்போன் பயன்படுத்தவில்லை.

இதனிடையே, போலீசாரின் வாகனச் சோதனையின்போது தப்பியோடிய சுரேஷை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொள்ளையில் 7 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், மூளையாக முருகன் என்பவர் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கொள்ளையடித்து சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் சி.சி.டி.வி புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட திருச்சி லலிதா ஜூவல்லரி கடை நேற்று மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. விஜயதசமி, தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் விற்பனை பாதிக்கக் கூடாது என்பதற்காக உடனடியாக திறக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்கள் துளைபோட்ட சுவரின் பகுதி தற்காலிகமாக பிளைவுட் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
First published: October 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்