இளம்பெண் கொலையில் 10 ஆண்டுகளுக்குப்பின் திடீர் திருப்பம்!

காதலியின் கர்ப்பத்தை களைக்க பணம்கேட்டு தம்பியே, தாய்மாமனுடன் சேர்ந்து சுதாவை கடத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

news18
Updated: August 7, 2019, 10:35 AM IST
இளம்பெண் கொலையில் 10 ஆண்டுகளுக்குப்பின் திடீர் திருப்பம்!
கோப்புப் படம்
news18
Updated: August 7, 2019, 10:35 AM IST
திருச்சி அருகே 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான இவரின் மூத்த மகள் சுதா கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்தார்.

2007-ம் ஆண்டு ராஜ்குமார் என்பவருடன் சுதாவுக்கு திருமணம் நடந்தது. உறவு முறையில் சுதாவுக்கு தம்பியான செல்லிப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன் யோகேஸ்வரன் சுதாவை வேலைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.


இந்நிலையில் சுதா கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி இரவு வேலைக்கு செல்வதாக கூறி மாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கண்ணனூர் அரசு மருத்துவமனையில் இருந்து அன்று இரவு 8 மணிக்கு சுதா ஏன் வரவில்லை என தாய் ஜீவாவுக்கு போன் செய்து கேட்ட பின்னரே அவர் வேலைக்கு செல்லாதது தெரிந்தது.

மறுநாள் உறவினர்கள் பல இடங்களில் சுதாவை தேடியுள்ளனர். சுதாவின் தாய்மான் ரெங்கராஜூ, சுதாவின் தம்பி முறையுடைய யோகேஸ்வரன் ஆகியோரும் உடனிருந்து தேடியுள்ளனர்.

Loading...

எங்கு தேடியும் மகள் கிடைக்காததால், அவரது தாய் ஜீவா 2 நாட்களுக்குப் பிறகு துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் சுதாவின் மாமா ரெங்கராஜ், தம்பி யோகேஸ்வரன் ஆகிய இருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து சுதா குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு, ரெங்கராஜுவும், யோகேஸ்வரனும் தலைமறைவாகி விட்டனர். வழக்கு விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டது.

பின்னர், சுதாவின் தாய் உள்ளிட்டவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடந்தது. எனினும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

மேலும், சுதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் தாய் கொடுத்த புகாரை எடுத்துக்கொள்ள முடியாது கணவர்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கூறி விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர் .

இதையடுத்து 2011-ம் ஆண்டு சுதாவின் கணவர் ராஜ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் ராஜ்குமார் 2-வது திருமணம் செய்துகொண்டதால் இந்த வழக்கில் அவரும் ஆர்வம் காட்டாமல் இருந்தார். 2014-ம் ஆண்டு தனது மகள் காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுதாவின் தாய் ஜீவா மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. துறையூர் காவல் நிலையத்தில் 8 காவல் ஆய்வாளர்கள் மாறியும் சுதாவை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை கோரப்பட்ட வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற கிளை காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் மேற்பார்வையில் துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது சுதாவின் பெற்றோர் போலீசாரிடம் சுதாவின் தாய்மாமன் ரெங்கராஜ், தம்பி யோகேஸ்வரன் மீதே சந்தேகம் இருப்பதாக மீண்டும் தெரிவித்தனர்.

இதை அடுத்து சென்னையில் கால் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த இருவரையும் பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சுதாவின் தம்பியான யோகேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்ததுள்ளார். அவர் கர்ப்பமடைந்ததால், காதலியின் கர்ப்பத்தை கலைக்க பணம் தேவைப்பட்டுள்ளது. இதை அடுத்து, யோகேஸ்வரனும், ரெங்கராஜும் சேர்ந்து உறவுக்கார பெண்ணான சுதாவிடம் பணம் அல்லது நகை தருமாறு கேட்டுள்ளனர்.

அவர் மறுத்துவிட்ட நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி துறையூர் அன்னை மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வேலைக்குச் செல்ல நின்றிருந்த சுதாவை, மருத்துவமனையில் விடுவதாக யோகேஸ்வரன் காரில் ஏற்றிச் சென்றார்.

அதன் பின்னர் தீரன்நகர் அருகே ரெங்கராஜும் காரில் ஏறியுள்ளார். இருவரும் கொத்தம்பட்டி பாலம் அருகே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலைக்குள் கடத்தி சென்று சுதாவிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என்றதால் அவர் அணிந்திருந்த நகையை கேட்டுள்ளனர்.

சுதா நகையை கழட்டித் தராததால் ஆத்திரமடைந்த இருவரும் காருக்குள் வைத்து சுதாவின் துப்பட்டாவால் அவருடைய கழுத்தை நெறித்துள்ளனர்.

அதன்பின்னர் சுதாவின் கையிலிருந்த 6 சவரன் தங்க வளையல்கள், 3 சவரன் தங்கத்தோடு, மூக்குத்தி, மோதிரம் ஆகியவற்றை கழட்டிக்கொண்டனர்.

இதில் ஒரு காது மற்றும் மூக்கில் இருந்த நகையை கழட்ட முடியாமல் பிளேடால்அறுத்து நகையை பறித்துள்ளனர்.

இதையடுத்து சுதாவின் உடலை நாமக்கல் அருகே தத்தாத்திரிபுரம் பெரியாண்டவர் கோயில் செல்லும் வழியில் உள்ள புதருக்குள் வீசியது தெரிய வந்தது.

அப்போது சுதாவின் உடலில் உயிர் இருக்கலாம் எனக்கருதி அருகிலிருந்த பாறாங்கல்லை எடுத்து தாக்கி கொன்றுள்ளனர்.

சுதாவின் முக அடையாளத்தை மறைக்க அவரின் முகத்தை கல்லால் அடித்து சிதைத்துள்ளனர்.

பின்னர் பாறாங்கல்லில் கைரேகை இருக்கும் என்று பயந்து பாறாங்கல்லை காரில் எடுத்துச் சென்று கழுவி ரெங்கராஜ் வீட்டருகே 10 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து, கொலையாளிகள் பயன்படுத்திய பாறாங்கல்லை போலீசார் பறிமுதல் செய்தனர்.

10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவந்த போலீசார், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...