Home /News /tamil-nadu /

கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?

கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?

திருச்சி சிவா

திருச்சி சிவா

Trichy Siva : திமுக எம்.பி. திருச்சி சிவாவின் 69வது பிறந்தநாள் விழா திருச்சியில் கறிவிருந்துடன் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாட்டப்பட்டது.

தலைநகர் டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும், திமுகவின் முகமாக அறியப்படுபவர் திருச்சி சிவா. திமுகவின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர், சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாக திகழ்கிறார். தொடர்ச்சியாக, 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேசிய அளவில் கட்சிகளை தாண்டி, பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல நட்புறவை பேணி வருபவர். திமுகவில், கல்லூரி பருவத்தில் இணைந்த இவர், அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்ட, 1976ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர்.

இளைஞரணி முதல் டெல்லிவரை

இதனால், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளைப் பெற்றார்.

தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கிய அடையாளமாக விளங்கியது, திமுக இளைஞரணி. அந்த திமுக இளைஞரணியை உருவாக்கிய ஐவரில் ஒருவர் திருச்சி சிவா. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தற்போது, திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த, 25 ஆண்டுகளாக டெல்லி அரசியலை மையப்படுத்தியே இவரது செயல்பாடுகள் இருந்தன.

டெல்லியில் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து உரையாடுவது, மாநிலங்களவையில் திமுக தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பது, கட்சித் தலைமை அறிவுறுத்தும் டெல்லி வேலைகளை கனகச்சிதமாக செய்து முடிப்பது போன்றவற்றில் அமைதியாக ஈடுபட்டு வருகிறார்.

உள்ளூர் அரசியலில் முன்னெப்போதும் பெரிதாக ஈடுபாடு காட்டியது இல்லை. கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தபோதிலும், உள்ளூரான திருச்சியில் பெரியளவில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். ஆனால், நேற்று தனது, 69வது பிறந்தநாள் கொண்டாட்டம் மூலம், சில அதிரடி அரசியல் சமிக்கைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.

தடபுடல் கறிவிருந்து

திருச்சியில் நடந்த திருச்சி சிவாவின் பிறந்தநாள் விழா வழக்கத்துக்கு மாறாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவரது வீடு அமைந்துள்ள கன்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு செல்லும் வழியெங்கும் தோரணங்கள், வாழை மரங்கள், கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

வாழ்த்து போஸ்டர்கள் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.
சிவா வீட்டின் முன்பு, 2 மேடைகள் அமைக்கப்பட்டு ஒன்றில் கட்சியினர் சிவாவை நேரில் வாழ்த்துவதற்கும், மற்றொன்றில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதற்கு அருகிலேயே பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி வறுவல், அவித்த முட்டை என்று தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.

நேரு 'ஆப்சென்ட்'

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் மதிவாணன், கவுன்சிலர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கான திமுகவினர், திருச்சி சிவாவை நேரில் வந்து வாழ்த்தினர்.  ஆனால், உள்ளூரிலேயே இருந்தபோதும், திமுக முதன்மைச் செயலரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு, சிவாவுக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் வரவில்லை.

மாலையில், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டலில், இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பில், திருச்சி சிவாவின் பிறந்த நாள் இலக்கிய விழாவாக  நடத்தப்பட்டது. இதில் திமுகவினர் மட்டுமின்றி, கவிஞர்கள் முத்துலிங்கம், அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் போஸ் வெங்கட் மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்பினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொண்டர்கள் உற்சாகம்

“என்ன இந்த திடீர் மாற்றம்?” என்று திருச்சி சிவாவின் தீவிர ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  “வந்துட்டேன்னு சொல்லு.. 25 வருஷத்திற்கு பிறகு எப்படி போனேன்னோ அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைப்போல தான் அண்ணன் தற்போது அதிரடியா அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்ன தான் அவர் ஜனாதிபதி, பிரதமரிடம் சர்வ சாதாரணமாக பேசினாலும், உள்ளூரில் உள்ள எங்களை போன்ற தொண்டர்களுக்கு எவ்வித உதவியும் செய்யமுடியாத நிலையில் தான் இருந்தார்.

அவர் கைகாட்டும் நபர்கள், திருச்சியில் ஒரு வட்டச் செயலாளரோ, வார்டு கவுன்சிலர் பதவியை கூட வாங்க முடியாத நிலைதான் உள்ளது. மேலும், அவரது சொந்த மகனே பாஜகவில் சேர்ந்து அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

Must Read : கரு முட்டை விற்பனை... சேலம் தனியார் மருத்துவமனையில் ஆய்வு

உள்ளூர் அரசியல் மற்றும் குடும்பத்தில் அவருக்கு ஏற்பட்ட சரிவுகள், அவரது கொதிநிலையை உச்சப்படுத்தியதன் விளைவுதான் இந்த பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டங்கள். எதிர்வரும் காலங்களில், டில்லி அரசியலை தாண்டி, உள்ளூர் அரசியலில் திருச்சி சிவா உற்சாகமாக களமிறங்க போகிறார்” என்று குதூகலிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, மூத்த அமைச்சர் கே.என்.நேரு ஒரு அணியாகவும், இளைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு இடையில் திருச்சி சிவா மூன்றாவது அணி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Published by:Suresh V
First published:

Tags: DMK, Trichy, Trichy Siva

அடுத்த செய்தி