ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ராமஜெயம் கொலை வழக்கு: ரவுடிகளிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ராமஜெயம் கொலை வழக்கு: ரவுடிகளிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு

ராமஜெயம்

ராமஜெயம்

12 நபர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான அனுமதி மற்றும், நடத்துவதற்கான நாட்கள், இடத்தை நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்  கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.

  இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த  கொலை வழக்கில் சந்தேகத்திற்கிடமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கும்படி, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-6ல் மனுத்தாக்கல் செய்தனர்.  நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரான, 13 ரவுடிகளில் தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

  மற்ற  12 பேரும் சோதனையின் போது வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உடனிருக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். அதையடுத்து, 12 பேரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, தங்களது மருத்துவ தகுதிச் சான்றிதழுடன் வரும்  21ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

  இதையும் படிங்க: மியான்மரில் சிக்கி தவித்த 22 தமிழர்கள் சென்னை திரும்பினர்... நேரில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

  அதன்படி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்,  சாமிரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர் ஆகிய, 6 ரவுடிகள் இன்று காலை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வந்தனர். இவர்களிடம், ரத்தம், சிறுநீர் பெறப்பட்டது. தொடர்ந்து, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் குமாருக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை  செய்யப்பட்டது. இவர்களை தொடர்ந்து, நாளை  மோகன்ராம், நரைமுடி கணேசன், கலைவாணன், தினேஷ்குமார், மாரிமுத்து ஆகிய ஐந்து பேருக்கும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. முழு உடல் மருத்துவப் பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு, இதன் சான்றிதழ்கள் அனைத்தும் வரும், 21ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

  இதன் அடிப்படையில், 12 நபர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான அனுமதி மற்றும், நடத்துவதற்கான நாட்கள், இடத்தை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: KN Nerhu, Trichy