நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று 2020 டிசம்பர் மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான் இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ரஜினியின் இந்த முடிவை அரசியல் கட்சியினர் பலரும், அவரது நலம் விரும்பிகளும் வரவேற்றனர். இந்நிலையில் திருச்சி ரஜினி மக்கள் மன்ற மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.