திருச்சியில் தாமதமாக தொடங்கிய அஞ்சல் வாக்குப் பதிவு: தேர்தல் அலுவலருக்காக 1.30 மணி நேரம் காத்திருந்த அரசு ஊழியர்கள்

தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள்

திருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டியது, ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 11.35 மணிக்கு தொடங்கியது.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள் 18,800 பேரில், 14,300 பேர் தபால் வாக்குச் செலுத்த விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,800 பேர், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பிற மாவட்டத்தினர். இதுமட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 6,800 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். இவர்களின் இல்லத்துக்கே சென்று வாக்கைச் சேகரிக்கவும் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள், கணக்கீட்டுக் குழு, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, வீடியோ பார்வைக் குழு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளவர்கள்,  வருவாய்த் துறையினர் என 700-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கு


 

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  காலை 11 மணிக்கு மேலாகியும் அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, "அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் வந்த பிறகு அவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியை சீல் வைத்த பின்னர்,  வாக்குப்பதிவைத் தொடங்க முடியும்" என்று அலுவலர்கள் கூறினர்.
ஆனால், "தேர்தல் அலுவலர்களின் தாமத வருகையாலேயே அஞ்சல் வாக்குப் பதிவு தாமதம் ஆகிறது" என்று வேட்பாளர்களின் முகவர்கள் கூறினர். இதேபோல், அஞ்சல் வாக்கைச் செலுத்த வந்த அரசு ஊழியர்கள் கூறும்போது, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அஞ்சல் வாக்குப்பதிவு மையத்திலேயே காத்திருக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கவில்லை என்றனர்.

அஞ்சல் ஓட்டுபோட காத்திருக்கும் ஊழியர்கள்


ஒருவழியாக, காலை 11.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் அங்கு வருகை தந்தார். இதையடுத்து  வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு, காலை 11.35 மணிக்கு அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கியது.

இதற்கிடையில், தபால் வாக்குச் செலுத்த வரும் அலுவலர்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்காக வாக்குப்  பதிவு மைய வளாகத்தில் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: