திருச்சி: போலீசாரின் தபால் ஓட்டுகளைப் பெற பணப்பட்டுவாடா - திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா?

திருச்சி: போலீசாரின் தபால் ஓட்டுகளைப் பெற பணப்பட்டுவாடா - திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா?

தபால் வாக்களிக்கும் போலீசார்

திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து  மாறி மாறி  புகார் அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா அல்லது  ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் போலீசாரின் தபால் ஓட்டுகளை பெறுவதற்காக, கவர்களில் பணம் வைத்து வழங்கப்பட்டது குறித்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் புகார் அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். கடந்த 26ம்  தேதி  மண்டல அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக்குழு உள்ளிட்டோர் வாக்களித்தனர். தொடர்ந்து நேற்றைய தினம்  (27ம் தேதி) வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்களித்தனர். இதன்படி மாவட்டத்தில் உ ள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் நேற்று  8, 194 பேர் வாக்களித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, திருச்சி மாநகர போலீசார் 1, 672 பேர் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். நாளைய தினம் புறநகர் போலீசார் 981 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர்,  கண்டோன்மெண்ட்  ஆகிய  காவல் நிலையங்களில்  பணியாற்றும் ஆய்வாளர்கள் முதல், காவலர்கள் வரை, தனித்தனி கவர்களில் பணம் வைத்து விநியோகம் செய்யப்படுவதாக தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திடீர் ஆய்வு செய்தார். இதில் சுமார் 100 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார், வருவாய் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தில்லைநகர், அரசு மருத்துவமனை  காவல்நிலைய எழுத்தர்களிடம்  (ரைட்டர்)  காவல்துறை உதவி ஆணையர் வீரமுத்துவும் தனியாக விசாரணை நடத்தினார். இதையடுத்து, தில்லை நகர் ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர் சுகந்தி, அரசு மருத்துவமனை எஸ்.ஐ பாலாஜி, காவலர் ஸ்டெல்லா, நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் சங்கரன், கலியமூர்த்தி  ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சந்தேகத்திற்கிடமான, 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரை கூண்டோடு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிசிடிவி

திருச்சி மாநகரத்தில் உள்ள 8 காவல் நிலைய சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு அரசியல் கட்சியினர், கட்சி சார்ந்த வழக்குரைஞர்கள் வருகை, போலீசாருடன் சந்திப்பு உள்ளிட்ட காட்சிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தலை நிறுத்தவும் தன் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வதந்தி பரப்புவதாகவும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நேற்று இரவு புகார் கடிதம் அனுப்பினார்.

அதேவேளையில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர், திமுக முதன்மைச் செயலாளர்,  கே.என்.நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை தகுதி  நீக்கம் செய்யக் கோரியும் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் மாவட்ட வருவாய்  அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம், திமுக வழக்குரைஞர் மீதே வழக்கு உள்ளிட்டவற்றை வைத்துப் பார்க்கும் போது, திமுகவினர் தவறு செய்திருப்பது உறுதியாகிறது என்றார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து  மாறி மாறி  புகார் அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா அல்லது  ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published by:Karthick S
First published: