பிளஸ் ஒன் மாணவியை புத்தாண்டு கேக் வெட்ட அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காதலன்...

நைட்டி மற்றும் ஷால் அணிந்த நிலையில், வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

  • News18
  • Last Updated: January 4, 2020, 8:06 AM IST
  • Share this:
திருச்சி மாவட்டத்தில், பிளஸ் ஒன் படித்து வந்த மாணவி வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கை, கால்களைக் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவி, பிளஸ் ஒன் படித்து வந்தார். தந்தை கூலி வேலை செய்து வந்த நிலையில், வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தின் மாத்தூரில் உள்ள பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு நைட்டி மற்றும் ஷால் அணிந்த நிலையில், வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அன்று இரவு முழுவதும் பெற்றோர் உறவினர்கள் மாணவியைத் தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து புத்தாண்டு அன்றும் தேடியும் அவர் கிடைக்காததால் மணிகண்டம் காவல்நிலையத்தில் தந்தை புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவியின் வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவுந்தநாயக்கன்பட்டி அருகே மாணவியின் செருப்புகள் கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. பெற்றோர், உறவினர்களும் அங்கு தேடிப் பார்த்தபோது ஒரு பனைமரத்தின் கீழே, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மாணவியின் சடலம் கிடந்துள்ளது.


சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவியின் வீட்டில் அவரது பையில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் சில தொடர்பு எண்கள் இருந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது 20 வயதான மதி என்ற இளைஞர் பிடிபட்டார்

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன மாணவியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஓராண்டாக மாணவியும், மதி என்ற அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை சொல்லி பாலியல் ரீதியாக அம்மாணவியை பயன்படுத்த மதி பல முறை முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று கேக் வெட்டிக் கொண்டாடலாம் என மாணவியை அழைத்துச் சென்றுள்ளார் மதி. வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அழைத்துச் சென்ற மதி, திடீரென மாணவியின் துப்பட்டாவால் அவரது வாயை இறுக்கி கட்டியுள்ளார்பின்னர் அவரை தரதரவென புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாணவி விழித்துக்கொண்டால், பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிப்பார் என்பதால், கொலை செய்ய திடீரென மதி முடிவு செய்துள்ளார். அச்சத்தில், சில நொடிகளில், மாணவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மதி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்

வாக்குமூலத்தில் தான் மட்டுமே மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்ததாக மதி சொல்லியுள்ள நிலையில், இன்னும் சிலருக்கு இந்த கொடூரத்தில் தொடர்பிருக்கலாம் என்று போலீசாரும் மாணவியின் பெற்றோரும் சந்தேகிக்கின்றனர்.

திருச்சியில் நடந்த இந்தக் கொடூரம் முதல் சம்பவம் அல்ல. சமீபத்தில் கோவையில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது காதலன் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் மதுரையைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியை அவரது காதலன் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆண் நண்பர்களுடன் பழகுவது தவறல்ல; ஆனால் எந்த எல்லை வரை பழக வேண்டும் என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் பெண் குழந்தைகளுக்கு கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,. இல்லை என்றால், இதுபோன்ற விபரீதங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.


First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்