பாலம் கட்டியும் பாதை வரவில்லை: இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் அதிருப்தி..

இரு மாவட்டங்களை இணைக்கும் கல்லணை உயர்மட்ட பாலம் கட்டியும் பயனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாலம் கட்டியும் பாதை வரவில்லை: இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் அதிருப்தி..
கல்லணை புதிய உயர் மட்ட பாலம்
  • Share this:
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லையோர மக்கள் பயன்படுத்தவும், கனரக வாகன போக்குவரத்திற்கும் கல்லணையில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென இரு மாவட்ட பொது மக்கள், சுற்றுலா பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

இதையடுத்து கல்லணை, கொள்ளிடம் ஆற்றில் ₹ 67 கோடி செலவில் உயர்மட்ட பாலம்  அமைக்கப்படும் என்று  கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்ததோடு,  அதற்கான அடி கல்லையும் அதே ஆண்டு நாட்டியது.

இந்த உயர் மட்ட பாலத்தில்  ஒரே நேரத்தில் மூன்று வாகனம் செல்லும் அளவிற்கு 12.90 மீட்டர் அகலத்திற்கும் சுமார் 1050 மீட்டர் தூரத்திற்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இந்த பாலத்தை 30 மாதத்தில் முடிப்பதாக தெரிவித்தனர்.


ஆனால் இயற்கை சீற்றத்தால் பாலத்திற்காக செய்து வைக்கப்பட்ட தூண்கள் சேதமடைந்தன. இதனால் பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பாலம் பணி முழுவதுமாக நிறைவு பெற்றுவிட்டது. கல்லணை தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி சாலையோடு பாலத்தை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் மறுபுறம் பாலத்தை இணைக்கும் திருச்சி மாவட்டம் கிளிகூடு சாலையோடு அமைக்கும் பணி இதுநாள் வரை தொடங்கப்படவில்லை. காரணம் அந்த பகுதியில் உள்ள 29 விவசாயிகளின் விளை நிலங்களை பாலத்தை இணைக்கும் சாலை அமைக்க அரசு கையகப்படுத்துவதாக கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அரசு அந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தற்போது வரை வழங்கவில்லை.இதுகுறித்து அந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்கிறனர்.

இந்நிலையில்,பாலம் பணி பெரும்பாலும் முடிவடைந்ததால் பாலத்தை இணைக்கும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட ஒப்பந்தகாரர் கடந்த ஒரு வருட காலமாக முயற்சி செய்து வருகின்றார். இதற்கு கிளிக்கூடு விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வட்டியுடன் 3 மடங்கு உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அதன்படி வழங்கிய பிறகே பாலத்தை இணைக்கும் சாலை பணியை தொடங்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

இதனால் விவசாயிகளிடம் திருச்சி டிஆர்ஓ தலைமையில்  அமைதி பேச்சுவார்த்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கல்லணையை ஆய்வு செய்து, விவசாயிகளிடம்  போச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விவசாயிகளிடம் உங்களுக்கு உரிய தொகையை 30 முதல் 45 நாட்களில் பெற்றுத் தருவதாகவும் அதனால் உடனடியாக பாலத்தை இணைக்கும் சாலை அமைப்பதற்கு தடை செய்யாதீர்கள் என்றும் கூறினார். ஆனால் இதை விவசாயிகள் ஏற்கவில்லை. அதனால் சட்டப்படி செல்வதாக சிவராசு விவசாயிகளை மிரட்டும் தோரணையில் கூறி சென்றார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினரை வைத்து கிளிக்கூடு விவசாயிகளிடம் வங்கி கணக்கு புத்தகங்கள் கொண்டு வந்தால் உடனடியாக இழப்பீட்டு தொகை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறி ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட கடிதங்களில் கையெழுத்து பெற்ற்ள்ளனர். ஆனால் அந்த கடிதத்தில் தற்பொழுது பணியைத்  தொடங்குகிறோம் பணம் வந்ததும் உங்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கையெழுத்திட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஜுன்  26ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குவதாக வருவாய்துறையினர் அறிவித்திருந்ததாகவும் ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்,

இது குறித்து இணைப்பு சாலைக்கு நிலம் கொடுத்துள்ள விவசாயிகள் சக்திவேல், வேலாயுதம் ஆகியோர் கூறுகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர்  சிவராசு கல்லணையிலிருந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்னரை மாதம் ஆகிவிட்டது.  விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை இணைக்கும் கிளிக் கூட்டு சாலை பணியை தொடங்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் பாலம் கட்டியும் பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில், சாகுபடி பணிக்கே தவித்து வரும் நிலையில், கையகப்படுத்தும் நிலத்திற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

மேலும் படிக்க...

ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா..

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கி விரைவாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading