திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு போலவே இந்த கொரோனா காலத்திலும் அதிக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. நடப்பாண்டில் முதல் வகுப்பில் மட்டும் 116 மாணவர்கள் உட்பட 217 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் மாணவர்களின் எண்ணிக்கை 551-ஆக உள்ளது.
இந்நிலையில், சத்தமில்லாமல் மற்றொரு புதுமையை அப்பள்ளி நிகழ்த்தியுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த 'பெஸ்ட் ஷைன்' என்ற தனியார் கணினி நிறுவனம் மூலம் மாணவர்களுக்கான ஆன்லைன் செயலி ஒன்றை இப்பள்ளி இலவசமாகப் பெற்றுள்ளது. அந்த ஆன்லைன் செயலி செயல்பாட்டை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், மணிகண்டம்வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
Also read: செல்லப்பிராணிகளின் பட்டியலில் இருந்து பறவைகளை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசின் 'எமிஸ்' ஆன்லைன் செயலியை ஒத்துள்ள இப்பள்ளியின் ஆன்லைன் செயலி, கூடுதலான வசதிகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு போன் இல்லாத, சாதாரண போன் வைத்துள்ள மாணவர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த புதிய முயற்சியை பிற பள்ளிகளுக்கும் படிப்படியாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
செயலி தொடக்க நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கி, பாராட்டினர்.
ஆன்லைன் வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில் சிரமங்கள் இருக்கும் நிலையில், இப்படியொரு அசத்தலான முயற்சியை மேற்கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.