ஐபேக் குழுவினரோடு எந்த பிரச்னையும் இல்லை, திருச்சி மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் - கே.என்.நேரு

கே.என்.நேரு

கடந்த 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

  • Share this:
ஐபேக் குழுவினரோடு எந்த பிரச்னையும் இல்லை, அவர்கள் எங்கள் வெற்றிக்காவே பாடுபடுகின்றனர் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக, ஆட்சியைப் பிடிக்க பல்வேறு பிரச்சார வியூகங்களை வகுத்து வருகிறது. திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை கடந்த மாதம் தொடங்கினர். இதற்காகதிருச்சி - சென்னை நான்கு வழிச்சாலை சிறுகனூரில் 350 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாட்டுத் திடலை தயார்படுத்தி வருகின்றனர். ஒரு மாதமாக பணிகள் நடைபெற்றாலும்  வழக்கத்துக்கு மாறாக மாநாட்டுத் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை.  திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் மாநாட்டு ஏற்பாடுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் மாநாட்டுத் திடலுக்கு வருகை தருகின்றனர். இதற்காக தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக மாநாடுகள்  பிரம்மாண்ட பந்தல் அமைத்து, 2 அல்லது 3 நாட்கள் நடத்தப்படுவைது வழக்கம்.  இதே போல் 11வது மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு, பிரம்மாண்ட திடலும் தயாராகி விட்டது.  ஆனால், திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து தரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு ஆலோசனைகளையடுத்து பிரம்மாண்ட பந்தல் இல்லாமல்,  திறந்தவெளி மாநாடாக ஒரு நாள் மட்டும் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.  இது குறித்து ஐபேக் - திமுக நிர்வாகிகளிடம் ஒத்த கருத்து எட்டுவதில் தாமதமாகியது.  மாநாட்டு பணியில் சிறு தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் கேட்டதற்கு,திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும். ஓரிரு நாளில் மாநாட்டுத் தேதியை திமுக தலைவர் அறிவிப்பார். தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்கும் மாநாடாகவும் இது அமையும்.  ஐபேக் குழுவினரோடு பயணிப்பது புது அனுபவமாக உள்ளது. அவர்களோடு எந்தவித பிரச்சினையும் இல்லை. எங்கள் வெற்றிக்காகவே அவர்கள் பாடுபடுகின்றனர்  என்றார்.

மேலும்,திமுகவில் மாநில மாநாடுகள் முக்கியத்துவம் பெற்றவை. அதிலும் திருச்சியில் நடைபெற்ற மாநாடுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றவை. காரணம், கடந்த 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தேர்தலில் பங்கெடுக்காத இயக்கமாக இருந்த திமுக 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற 2வது மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா ? என்று  தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.  இதற்காக 2 வாக்குப் பெட்டிகளை வைத்து தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்டனர்.

பெரும்பான்மை தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 1957ம் ஆண்டு திமுக முதல்முறையாக தேர்தலி ல்  போட்டியிட்டது. பத்தாண்டுகளில் 1967ல் ஆட்சியைப் பிடித்தது.   அப்போது முதல் திருப்புமுனை திருச்சி என்றழைக்கப்படுகிறது.

 
Published by:Vijay R
First published: