TRICHY COIMBATORE COLLECTORS TRANSFERRED DUE TO ASSEMBLY ELECTION 2021 VAI
திருச்சி, கோவை ஆட்சியர்கள் பணியிடமாற்றம்... வாகன சோதனையில் ஒரு கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தால் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை...
ஆட்சியர் திவ்யதர்ஷினி, எஸ்.பி. மயில்வாகனன் | கோப்புப் படம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் பதவியேற்றுக் கொண்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காரில் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக தேர்தல் சிறப்புப் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அதனடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு, காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் மற்றும் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினியும், ஸ்ரீரங்கத்தின் சார் ஆட்சியராக விசு மகாஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை துணை ஆணையராக இருந்த மயில்வாகணன் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களும் தேர்தல் பணிகளுக்கு தொடர்பில்லாத இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட எஸ்.நாகராஜன் பதவியேற்றுக் கொண்டார்.