திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கு, கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், காவிரி படித்துறை ஆளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவில் மங்களம் பெருக, சகல செல்வங்களும் பெருக, வேளாண்மை செழிக்க, உழவர் செழிக்க காவிரியைத் தாயாக நினைத்து வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை காவிரிக்கு சமர்ப்பித்து, வழிபாடு செய்து, தாலியைப் பெருக்கி அணிந்து கொள்வார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் ஆடிப் பெருக்கு விழாவின் போது மக்கள் பெருமளவில் கூடி வழிபாடு நடத்துவார்கள்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வயலுார் அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை வளாகக் கோயில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம்தேதிகளில் (நேற்றும் இன்றும்) நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடை அறிவிப்பு
பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கு, கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக அனுமதி இல்லை. அம்மா மண்டபம் உட்பட காவிரிக் கரை ஓரங்களில் மாநகர காவல் துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். மாலையுடன் வரும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட காவிரிக்கரைகளில் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் காவிரியை சகோதரியாக நினைத்து சீர் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஆண்டு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீ ரெங்க விலாச மண்டபம் வரை மட்டுமே நடைபெற உள்ளது.
அதன்படி, அம்மா மண்டபத்தில் மாலை 4.45 மணிக்கு காவிரி தாய்க்கு சீர் சமர்பித்தல் மட்டும் நடைபெறும்.
ஸ்ரீ நம்பெருமாள் அம்மா மண்டபம் வருகை இல்லை.
ஸ்ரீரெங்க விலாச மண்டபத்திலேயே இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : ஆடிப்பெருக்கு: எளிமையாக வீட்டிலேயே கொண்டாடுவது எப்படி?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிப்பெருக்கின் போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய்கள் அமைத்து தண்ணீர் விட்டனர். அந்த தண்ணீரைத் தெளித்துக் கொண்டும் நீராடியும் வழிபட்டனர். இரண்டு ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.