பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் அம்பேத்கர் உருவச்சிலை முன்பு தீக்குளிப்போம்: திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்

பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்

திருச்சி பெல் நிறுவனத்தின் உள்ளே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தீக்குளித்து உயிரிழப்பேன் என்று ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் சுமார் 40 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இருந்தும் பெல் நிர்வாகம் செவிசாய்காத காரணத்தினால் அவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    இந்நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதனை பெல் நிர்வாகம் மதிக்கவில்லை என்றும். இதனை தொடர்ந்து பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றத்தை  நாடியதாகவும் தெரிகிறது. அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக விசாரித்து கடந்த 2019 மார்ச் 30ஆம் தேதிக்குள் இந்திய தொழிலாளர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை இந்திய தொழிலாளர் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ராமலிங்கம் கடந்த மார்ச் மாதம் 2ம்தேதி இந்திய தொழிலாளர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பிக்காவிட்டால் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளான இன்று பெல் வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் உருவ சிலைக்கு முன்பு சுதந்திர கொடியை ஏந்தி தீக்குளிக்கப் போவதாகவும், தான் இறந்த பிறகு நீதி கொடுக்கக்கூடிய நீதிமன்றங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் கூறி கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பெல் நிர்வாக பொறுப்பில் இந்திய தொழிலாளர் நீதிமன்றம் வரும் 29ஆம் தேதி இவ்வழக்கு சம்பந்தமாக தீர்ப்பு வழங்க உள்ளது என்றும் அதற்குள் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என கூறியுள்ளனர்.

    ஆனால் ராமலிங்கம் ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே தீர்ப்பு சொல்ல விடாமல் பெல் நிர்வாகம் வாய்தா வாங்கி இந்த வழக்கை இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியதோடு ராமலிங்கம் திட்டமிட்டபடி அம்பேத்கர் சிலை முன்பு தீக்குளிப்பேன் எனக்கூறி எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் ராமலிங்கம் இன்று காலை பெல் பயிற்சி மையத்திற்கு வந்து அம்பேத்கர் சிலை முன்பு தீ குளிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் பெல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அங்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள்,  சங்க துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கைது செய்யக் கூடாது எனவும் கூறி சுரேஷ்மாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் படிக்க... கோயில்களில் பொது தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் வழிபாடு

    பின்னர் ராமலிங்கம்தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் அனுமதி அளித்தனர். அதன்பிறகு பெல் பயிற்சி மையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் உடன் சேர்ந்து ராமலிங்கம் மாலை அணிவித்தார்.

    அப்போது சக தொழிலாளர்களிடம் ராமலிங்கம் தன்னிடம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு உள்ளதாகவும் அதற்குள் செய்யவில்லை என்றால் பெல் நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் எண் 24 பில்டிங் முன்பு தனது குடும்பத்துடன் தீ குளிப்பேன் என்று கூறினார்.

    மேலும் திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு வார காலத்திற்குள் ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் நம்மோடு இணைந்து போராடுவதற்கு தயாராக உள்ளதாக கூறியதாக கூறினார்.

    அதன் பிறகு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த ஒப்பந்த தொழிலாளர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: திருச்சி திருவெறும்பூர் பெரியசாமி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி
    Published by:Vaijayanthi S
    First published: