தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மலை கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மலைவாழ் மக்கள் ஆதங்கம் தெரிவித்திருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்து, கடல்மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 100 அடியில் அமைந்துள்ளது ஏரிமலை கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ராகி, கடுகு, நிலக்கடலை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு அதன் மூலம் சிறிய அளவிலான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இப்பகுதியில் சாலை, மின்சாரம், மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏரிமலை கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டவுனுக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், பிரசவ காலத்தில் பெண்கள் கடும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்புகள் நேரிடுவதாக மலைவாழ் பெண் செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நமது செய்தியாளர் கேட்டபோது, ஏரிமலை கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே, அடிப்படை வசதிகள் செய்து தர முடியும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஏரிமலை கிராம மக்களுக்காக தற்போது மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் அங்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.