பூம் பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆதியன் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்ற மேளம் அடித்து யாசகம் கேட்பதையே வாழ்வாதாரத் தொழிலாக வைத்திருந்தனர். நாகை அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் அவர்கள், சில காலங்களாக வேறு தொழிலுக்கு மாறி, பிளாஸ்டிக் பாத்திரங்கள் விற்பது, பழைய துணிகள் வாங்கி விற்பது, வளையல், ஊசிமணி விற்பது போன்ற தொழில்களைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கபட்ட நிலையில் தற்போது வருமானம் இழந்து வீட்டில் முடங்கி இருந்தனர். இச்சூழலில், அவர்களின் வாழ்வாதார பாதிப்பை உணர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் தங்க கதிரவன், அந்த பகுதியைச் சேர்ந்த 25 பேருக்கு கூட்டுறவு கடனில் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த ஆதியன் இன மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டது. கால்நடையோடு இணைந்த வாழ்வையே மேற்கொண்டிருந்த அவர்களுக்குக் கறவை மாடுகள் கொடுக்கப்பட்டு இருப்பது, மகிழ்ச்சியையும் வருமானத்தையும் தருவதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த செல்வி.
Also read: தெலங்கானா: ரூ. 1.10 கோடி லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை
கறவை மாடுகள் வழங்கப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் கடனை முறையாக கட்டுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இவர்களின் பாலை கொள்முதல் செய்ய பால் கொள்முதல் மற்றும் விற்பனை மையமும் அமைக்கப்பட உள்ளது கூடுதல் சிறப்பு. கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மாடுகளுக்காக கடன் வழங்கப்பட்டாலும், அவர்கள் அந்தக் கடனை அடைப்பதற்கான வழிகளும் செய்து தரப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன், இதேபோல தமிழகம் முழுவதும் வாழ்வாதாரம் இழந்துள்ள ஆதியன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் உதவ முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சுனாமிக்குப் பிறகு நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு தற்போது நிரந்தர வீடுகளில் நாங்கள் வசித்து வந்தாலும், அரசும், தொண்டு நிறுவனங்களும், பலகட்ட உதவிகளை தங்களுக்குச் செய்து வந்தாலும், தங்களுடைய பிள்ளைகள் கல்வியில் பெரிய அளவில் உயர்ந்துவர சாதிச் சான்றிதழ் இல்லாதது பெரும் தடையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், சான்றிதழ் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.