Black fungus : வேலூரில் 4 நாட்களில் 75 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

கருப்பு பூஞ்சை

நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், வேலூரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    கொரோனாவை போலவே இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது கருப்பு பூஞ்சை தொற்று. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை கருப்பு பூஞ்சை தாக்குகிறது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 75 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதால் அவரது இடதுகண் அகற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    கோவையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 21 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுக்கரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கந்தசாமி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என, மகள் சுபாஷினி வேதனை தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்நோய் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அம்போடெரிசின் பி ஊசிகளின் தயாரிப்பு பணிகளை ஜெனிடெக் லைஃப் சயின்சஸ் (Genetec Lifesciences) நிறுவனம் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவில் அம்போடெரிசின் பி மருந்தை தயாரிக்கும் இரண்டாவது நிறுவனம் இது.

    குறைந்த உற்பத்தி மற்றும் அதிக விலையின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மைலான் நிறுவனம் 7000 ரூபாய்க்கு மருந்தை விற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஆய்வகத்தில் உற்பத்திப் பணிகளை தொடங்கியுள்ள ஜெனிடெக் லைஃப் சயின்சஸ் நிறுவனம் 1,200 ரூபாய்க்கு மருந்து விற்கப்படும் என அறிவித்துள்ளது.

    Must Read : எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் தமிழகத்தில் அதிகரிப்பு... காரணம் என்ன?

    உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், அம்போடெரிசின் பி மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்து, தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: