Home /News /tamil-nadu /

உரிமையாளர்களுக்கே தெரியாமல் காரை அடகுவைத்து மோசடி: டிராவல்ஸ் அதிபர் கைது!

உரிமையாளர்களுக்கே தெரியாமல் காரை அடகுவைத்து மோசடி: டிராவல்ஸ் அதிபர் கைது!

டிராவல்ஸ் மோசடி

டிராவல்ஸ் மோசடி

நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையில் அப்பாவு போல 22 நபர்கள் தங்களது கார்களை அருண் குமாரிடம் வாடகைக்கு கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது.

டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கி புதிய கார்களை கார் உரிமையாளர்களுக்கே தெரியாமல் அடமானம் மற்றும் விற்பனை செய்து வந்த மோசடி ட்ராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 12 கார்கள் மீட்கப்பட்டன.

சென்னை போரூர் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த அப்பாவு (62) என்பவர் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை பகுதியில் இயங்கி வந்த விவிலிய டிரான்ஸ்போர்ட் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்கிற நிறுவனத்தில் அருண் குமார் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார்.
ஒரு மாதம் மட்டுமே அருண்குமார் ரூ. 20,000 வாடகை கொடுத்து, அதன்பிறகு வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு காரை மீட்க நேரில் சென்றபோது  அருண்குமார் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில்  அவர் புகார் அளித்தார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையில் அப்பாவு போல 22 நபர்கள் தங்களது கார்களை அருண் குமாரிடம் வாடகைக்கு கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜி தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விவிலியா ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் தற்போது இயங்கவில்லை எனவும், சென்னை நொளம்பூரில் இதே போன்றதொரு கார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அதன் உரிமையாளர் அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: போலீஸ்காரர்களுக்கு காதல் வலை விரித்து பல லட்சங்களை சுருட்டிய பலே பெண்..


இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசாரிடம் கேட்டபோது, மேற்கு முகப்பேரில் ஆருஷ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தில் அருண்குமார் மேலாளராக பணிபுரிந்து வந்ததும்,  அங்கு பணிபுரியும் போதே நிறுவனத்திற்கு தெரியாமல் சுமார் 25  வாகனங்களை வேறு டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும், அடமானம் வைத்தும் மோசடி செய்ததும் அதனால் புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் தெரியவந்தது.

நொளம்பூர் போலீசார் கைது நடவடிக்கைக்கு முன்பாக அருண்குமார் ஆரூஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரிந்து வந்து நுங்கம்பாக்கத்தில் விவிலியா ட்ராவல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  இதற்காக, 10 பெண்களை டெலிகாலர்களாக அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
வங்கி கடன் மூலம் புதிதாக கார் வாங்கியவர்கள் யார் யார் எனப் பட்டியலை பெற்று அவர்களை இந்த பெண் டெலிகாலர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

கொரோனா ஊரடங்கால் வங்கி EMI செலுத்த முடியாத நிலையில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு 'எங்களுடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் மாத வாடகைக்கு விட்டால் அதன் மூலம் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை கிடைக்கும்' என கூறியதை நம்பி பலரும் காரை விவிலியா டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் படிக்க: திண்டுக்கலில் மாணவனின் உயிரைப் பறித்த வீடியோ கேம்!


வாடகைக்கு எடுக்கப்படும் கார்களை  மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் அங்குள்ள புரோக்கர்கள் பல்வேறு ட்ராவல்ஸ் மற்றும் தனி நபர்களுக்கு அடமானம் வைத்துள்ளனர். ஒவ்வொரு காரையும் ரூ. 3 முதல் 5 லட்சம் வரை தொகையை பெற்றுக்கொண்டு கார் உரிமையாளர்களுக்கு மாத வாடகை தராமல், காரையும் திருப்பித் தராமல் 22 கார்களையும் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து பின் அலுவலகத்தை மூடிவிட்டு அருண்குமார் தலைமறைவாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட டிராவல்ஸ் உரிமையாளர் அருண்குமார்


இதனிடையே மேற்கு முகப்பேரில் ஆரூஸ் ட்ராவல்ஸ் நிறுவனத்தார்களுக்கு அருண்குமார் செய்த மோசடி குறித்து தெரியவர புகாரின் பேரில் நொளம்பூர் போலிசார் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மோசடி செய்த அருண்குமார் தற்போது சிறையிலிருப்பதை அறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரை மீண்டும் கைது செய்து போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரனை மேற்கொண்டதில் அருண்குமாரின் கார் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், மோசடி செய்யப்பட்ட கார்கள் எல்லாம் எங்கு இருக்கிறது என்பதை ஒரு சில கார்களில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் தேடத் தொடங்கினர். அதில் ஒரு காரை வாங்கிய தூத்துக்குடியைச் சேர்ந்த தரகரின் தகவல் கிடைக்கப்பெற சங்கிலித் தொடராக பல தரகர்களும் அவர்கள் மூலம் அடமானம் வைக்கப்பட்ட கார்களும் மீட்கப்பட்டது. தற்போது வரை 12 கார்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கார்களை மீட்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Car travel, Crime | குற்றச் செய்திகள், Fraud

அடுத்த செய்தி