முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை கவனப்படுத்த புதிய யோசனை - உண்ணாவிரதம் மற்றும் மிஸ்டு கால் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை கவனப்படுத்த புதிய யோசனை - உண்ணாவிரதம் மற்றும் மிஸ்டு கால் போராட்டம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை கவனப்படுத்தும் நோக்கில் உண்ணாவிரதம் மற்றும் மிஸ்டு கால் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  • Last Updated :

வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சம்பளம் வழங்கும்போது தொழிலாளர்களின் விடுப்பைக் கழித்து சம்பளம் வழங்குவது, விடுப்பில்லாவிட்டாலும் சம்பளத்தை பிடித்தம் செய்வது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இம்மாதம் 23ம் தேதிக்குள் அந்தச் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை விவாதித்து தீர்வுகாண நிர்வாகம் முன்வராவிட்டால் 24ம் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் கூட்டமைப்பு சங்கத் தலைவர்கள், சங்கத்திற்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவது என முடிவு செய்துள்ளனர்.

24ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய பின்பு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தியும் அனைத்து நிர்வாக இயக்குநர்களுக்கும் அந்தந்த கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிஸ்டு கால் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில், கழக மட்டத்தில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தை நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல பிரச்சாரம் செய்வதுடன் நிர்வாக இயக்குநர்களின் கைபேசி மற்றும் தொலைபேசி எண்களை தொழிலாளர்களுக்கு வழங்கி மிஸ்டு கால் கொடுத்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

Also read: பொய் புகார் கூறும் எம்.எல்.ஏக்கள் மனநல மருத்துவர்களை அணுகவும் - கிரண்பேடி காட்டம்

top videos

    அரசு இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முன்வராத நிலை ஏற்பட்டு தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றபோது, அதை ஆதரித்து அனைத்துக் கழகங்களிலும் சக்திமிக்க போராட்டங்களுக்குத் திட்டமிட வேண்டும் என அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Transport workers