முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'மணக்கோலம் கொண்ட மறுநாளே விதவைக் கோலம்..' கூவாகம் திருவிழா முடிந்து பிரியாவிடை பெற்ற திருநங்கைகள்

'மணக்கோலம் கொண்ட மறுநாளே விதவைக் கோலம்..' கூவாகம் திருவிழா முடிந்து பிரியாவிடை பெற்ற திருநங்கைகள்

கூவாகம் திருவிழா

கூவாகம் திருவிழா

koovagam | திருநங்கைகள் அனைவரும் கோயிலின் பந்தலடி சென்று தங்கள் கைகளில் உள்ள வளையல்களை உடைத்தும் தாலியை பூசாரி கைகளால் அறுத்துக் கொண்டும் விதவை கோலம் பூண்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கூவாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கூத்தாண்டவர் கோயில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் கோயில். திருநங்கைகள் ஆண்டுக்கொருமுறை கூடும் இந்த ஆலயத் திருவிழா திருநங்கைகளின் குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக பலியிடப்பட்ட அரவான் முதல் நாள் திருமணம் முடிந்து மறுநாள் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

கடந்த 5 ஆம் தேதியன்று சாகை வார்த்தல் நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக் கொள்ளும் சடங்கு செவ்வாயன்று நடைபெற்றது. மணமகளைப் போல அலங்கரித்துக் கொண்ட திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

பின்னர் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதையடுத்து புதன் கிழமையன்று காலையில் தேரோட்டம் தொடங்கியது. கொரோனா பரவலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரவானை தரிசனம் செய்தனர்.

ALSO READ |   மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியிலேயே மின்வெட்டு.. விவசாயிகள் புலம்பல்

 வெகு விமரிசையாக நடைபெற்ற தேர்த் திருவிழாவை தொடர்ந்து திருநங்கைகள் தாலி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநங்கைகள் அனைவரும் கோயிலின் பந்தலடி சென்று தங்கள் கைகளில் உள்ள வளையல்களை உடைத்தும் தாலியை பூசாரி கைகளால் அறுத்துக் கொண்டும் விதவை கோலம் பூண்டனர்.

மணக்கோலம் கொண்ட மறுநாளே விதவைக் கோலம் பூண்டாலும் விழாவில் பங்கேற்பதே தங்களுக்கு பெருமகிழ்ச்சி என்கின்றனர் திருநங்கைகள். நாடு முழுதும் இருந்து வரும் திருநங்கைகள் இரு நாட்கள் தங்கள் இன்னல்களை மறந்து கொண்டாடி தீர்த்து விட்டுத் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.

First published:

Tags: Transgender