ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்.. போக்குவரத்து போலீசாரின் புது முயற்சி

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்.. போக்குவரத்து போலீசாரின் புது முயற்சி

சாலை விதிமுறை மீறல்.. சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்..

சாலை விதிமுறை மீறல்.. சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்..

சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ் அப் (9003130103) போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக புகார் அளிக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

  சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கும் பதிவு செய்வது வழக்கம். மேலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிற காரணத்தினால் ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை வைத்து உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

  இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டு, உண்மையாக விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் குமுறல்களை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும் என்ன பயன் என்று புலம்பிய படி செல்லக்கூடிய காட்சிகளை நாம் சாலையில் பார்த்துள்ளோம்.

  தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறையின் புதிய நடவடிக்கையாக, போக்குவரத்தை ஒழுங்காக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை தட்டிகேட்டால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமோ என அஞ்சாமல், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையின் Greater chennai traffic police என்ற ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

  இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புகாரை விசாரித்து உடனடியாக அபராதமும் வழக்கும் பதிவு செய்கின்றனர். இந்த நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக புகார் அளித்த நபருக்கு புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கம் மூலம் பதிலளிக்கின்றனர்.

  இதையும் படிங்க - மறைந்த அம்மாவுக்கு கோயில் கட்டி வழிபடும் மகன்கள்… நாமக்கல்லில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

  இதன் மூலம் இரண்டு கண்களைக் கொண்டு போக்குவரத்து காவலர்கள் மட்டுமல்லாது, மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்களில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த செயல்படுவது போன்று, தற்போது நான்காவது கண்ணாக வாகன ஓட்டிகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் உதவலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

  இந்த அடிப்படையில் சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ் அப் (9003130103) போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக போக்குவரத்து தொடர்பான பொது மக்களின் புகார்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்வு அளிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒருமாதத்தில் 330 புகார்களை சமூக வலைதளங்கள் மூலம் பெற்று போக்குவரத்து போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  இதுபோன்று சமூகவலைதளங்களில் பொதுமக்கள் அளித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் புகைப்படத்தோடு போக்குவரத்து போலீசார் வெளியிட்டு வருகின்றனர்.

  மேலும் போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசல், சிக்னல் பழுது, முக்கியமான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மக்கள் கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தையும் மதித்து நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்து காவல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களின் போக்குவரத்து தொடர்பான குறைகளுக்கு உடனடியாக கஸ்டமர் கேர் போல் பதிலளிப்பதோடு மட்டுமல்லாமல்,நடவடிக்கைகள் எடுத்து போட்டோ ஆதாரங்களோடு பதிலும் போக்குவரத்து காவல்துறை எடுக்கின்றனர்.

  இனி போக்குவரத்து போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மட்டுமல்லாது உடன் வரும் வாகன ஓட்டிகள் சமூக வலைதளம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விதிமீறல் ஈடுபடுபவர்கள் அச்சத்தில் விதிகளை கடைபிடிப்பார்கள் என்ற அடிப்படையில் போக்குவரத்து போலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  சென்னை போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Chennai, Traffic Rules