நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் போட்டி - அச்சமின்றி போராடிய டிராபிக் ராமசாமி

நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் போட்டி - அச்சமின்றி போராடிய டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களுக்கு எதிராக வழக்கு, ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் போட்டி என துணிவுடன் வாழ்ந்தவர் டிராபிக் ராமசாமி.

 • Share this:
  உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி இன்று காலமானார். கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து தானே அந்த வழக்குகளில் வாதாடி மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி. 87 வயதாகிய டிராபிக் ராமசாமி உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தயடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிராபிக் ராமசாமி கடந்த 1934 ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ரெங்கசாமி காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகராக அப்போதைய காலக்கட்டத்தில் இருந்தவர். டிராபிக் ராமசாமியின் இயற்பெயர் சம்பத் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் காவல்துறைக்கு உதவிகரமாக இருந்ததால் டிராபிக் ராமசாமி என பெயர் பெற்றார்.

  டிராபிக் ராமசாமி தன்னுடைய இளம் வயதில் பெரம்பூர் பென்னி மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். பள்ளிப்படிப்பை தாண்டாத டிராபிக் ராமசாமி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தானே அந்த வழக்குகளில் வாதாடி பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.

  அதிக எடை ஏற்றிக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கட்டுப்பாடில்லாமல் மீன்பாடி வண்டிகள் சாலைகளில் இயக்க தடை உத்தரவை பெற்றார். சென்னையில் அனுமதி இல்லாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட பல அடுக்குமாடிக் கட்டிங்களை இடிக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தவர்.

  சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினை பெற்றவர். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என தடை உத்தரவை பெற்றார்.

  2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

  2016 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார். நல்லாட்சி இயக்கம் என்ற அமைப்பினை தொடங்கி 234 தொகுதியிலும் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது குறிபிடத்தக்கது.

  இவருடைய சமூக சேவையை மையமாக வைத்து பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: